முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மாளிகை முன்பு வக்கீல்கள் முற்றுகை

புதன்கிழமை, 20 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 21 - இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக 500 வக்கீல்கள் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் திரண்டனர். சுமார் 10 மணி அளவில் அங்கிருந்து இலங்கை அரசை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியபடி வக்கீல்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை நோக்கி செல்லும் சாலையில் அகில இந்திய வானொலி- தொலைக் காட்சி நிலையத்தின்  நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு இருந்து போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். வரிசையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 11 மணியளவில் ஊர்வலமாக சென்ற அனைத்து வக்கீல்களையும் முதலில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலி அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது வக்கீல்களில் ஒரு பிரிவினர் தடுப்பு வேலிகளை தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீஸ்- வக்கீல் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தாண்டி வக்கீல்களால் செல்ல முடியவில்லை.

இதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை செல்லும் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. பகல் 12 மணியளவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் வானொலி நிலைய என்ஜினீயர் அலு வலகத்துக்குள் மூடி இருந்த இரும்பு கதவில் ஏறி குதித்து உள்ள ஓடினர். இதனை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் பயத்தில் உட்புறமாக பூட்டிக் கொண்டனர். அலுவலகத்திற்குள் புகுந்த வக்கீல்கள் வாசலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வெளியில் அழைத்து வந்தனர். இதன் பிறகு போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், துணைத் தலைவர் முரளி, செயலாளர் அறிவழகன், சைதாப்பேட்டை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி பிரசன்னா, துணைத் தலைவர் நளினி, செயலாளர் மஞ்சுளாதேவி, வக்கீல்கள் முத்துராமலிங்கம், சிவசங்கர், ராஜேஷ், சந்தோஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர். இணை கமிஷனர்கள் திருஞானம், சங்கர், துணை கமிஷனர்கள் சுதாகர், சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அம்பத்தூர் கோர்ட்டில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஊர்வலமாக சென்று சென்னை-திருப்பதி சாலையில்  மறியலில் ்டுபட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்