முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்: கனிமொழி - ராசாவுக்கு சிபிஐ கோர்ட் கண்டனம்

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 22 - ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அவகாசம் கேட்ட கனிமொழி, ஆ. ராசா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இந்த வழக்கில் மே மாதம் 5ம் தேதி முதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று நீதிபதி ஷைனி திட்டவட்டமாக அறிவித்தார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அதாவது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நடக்காத ஊழல்களே இல்லை. ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முறைகேடு என்று இவர்களது ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இந்த ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ட ஊழல் என்றால் அதுதான் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். காரணம், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் வெளியிட்ட போது இந்த நாடே அதிர்ந்து போனது. இந்த ஊழல் தொடர்பாக முதலில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாதான் முதலில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து அவரது உதவியாளர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி. 

இவர் பங்குதாரராக உள்ள கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக இவரும் கைது செய்யப்பட்டு ஆ. ராசாவை போல் அதே திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு இவர் ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு ஆ. ராசா உட்பட அனைவருமே ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னால் ஆ. ராசா உட்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ. ராசாவிடம் விசாரிப்பதற்காக கிட்டத்தட்ட 1718 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வி புத்தகமே தயாரிக்கப்பட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது. இதை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என்று கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் ஏற்கனவே ஒருமுறை அவகாசம் கேட்டார்களாம். 

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீண்டும் இவர்கள் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. கேள்விகளை படித்து பார்க்க அவகாசம் தேவை என்று இவர்கள் கூறினார்களாம். இதனால் வெறுப்படைந்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி, கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் கண்டித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் இது போல் நடந்து கொள்ள கூடாது என்று எச்சரித்த நீதிபதி ஷைனி, மே 5ம் தேதி முதல் திட்டமிட்டபடி வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

ஆக, இந்த வழக்கில் மே 5ம் தேதிக்கு பிறகே பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்