முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகளைத் தாண்டி செயல்படுவேன்: பிரியங்கா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ரேபரேலி,ஏப்.23 - தனது கணவர் மீதான விமர்சனங்கள் வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், இதுபோன்ற தடைகளை தாங்கிக் கொண்டு செயல்பட இந்திரா காந்தியிடம் தான் கற்றுகொண்டுள்ளதாக பிரியங்கா காந்தி கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்ட அவரது மகள் பிரியங்கா பேசியதாவது:-

அரசியல் ஆதாயங்களுக்காகவும், தேர்தல் உத்தியாகவும் சில விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. என் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் எனது குடும்பத்தினரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. இவை எல்லாம் எனக்கு மன வருத்தத்தை தந்தாலும், எதிரிகளை எதிர்த்து உறுதியுடன் போராடக்கூடிய மன நிலை எனக்கு ஏற்படுகின்றது.

எனது கணவரை இழிவுப்படுத்துவதற்காக பல வேலைகள் இங்கு நடக்கின்றது. எனது குடும்பத்தை அவமானப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் தரும் பதில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி செயல்படுவது எப்படி என்பதை இந்திரா காந்தியிடம் நான் கற்றுக்கொண்டுள்ளேன்.

இந்தத் தேர்தல் வளர்ச்சி, மக்களின் தேவை, வேலை வாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேர்தலாக நான் நினைக்கிறேன். ஆனால், தேவையற்ற பேச்சுக்களால் மட்டுமே இந்தத் தேர்தல் முன்னெடுத்து செல்லப்படுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

நீங்கள் தற்போது சோனியா காந்தி என்பவருக்காக வாக்களிக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்காகவும், இந்த நாட்டுக்காவும் வாக்களியுங்கள். இந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளனர். எனது தாய் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்றாலும், அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இது இந்த நாட்டின் அழகு. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, என் குடும்பத்தின் மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் நடக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக என் கணவரை அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். இவை எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று பிரியங்கா மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்