முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக்ஸ்வெல் அதிரடியால் பஞ்சாப் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஷார்ஜா, ஏப்.24 - ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், கிங்ஸ் 11 பஞ்சாப் அணி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 72 ரன்களில் அபாரமாக வீழ்த்தியது. 

 முன்னதாக, டாஸ் வென்று ஹைதராபாத் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களான சேவாக் மற்றும் புஜாரா சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். கடந்த போட்டிகளில் ஏமாற்றம் அளித்த சேவாக் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்களும் அடக்கம். மற்றொரு துவக்க வீரர் புஜாரா 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாபின் கடந்த போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. வழக்கம் போல, மேக்ஸ்வெல் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 21 பந்துகளிலேயே அரை சதத்தைக் கடந்த மேக்ஸ்வெல், தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

பெரும்பான்மையான பந்துகளை மேக்ஸ்வெல்லே சந்தித்ததால், மில்லருக்கு பந்துவீச்சை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை. இந்த இணை 27 பந்துகளில் 68 ரன்களை எடுத்தது. இதில் மில்லர் எடுத்தது 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே. 18-வது ஓவரின் முடிவில், 43 பந்துகளில் 95 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல் மிஸ்ராவின் பந்தில் ஆட்டமிழந்து, சதம் அடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார். மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தில் 5 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடக்கம். கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே வர, பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை எடுத்தது. 

ஹைதராபாத்தின் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே நிலை தடுமாறியது. இரண்டாவது ஓவரிலேயே ஷிகர் தவாண் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபின்ச் மற்றும் வாட்சனும் ஏமாற்றம் தர, தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 7-வது ஓவரின் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 

ஒரு ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில், சன் ரைஸர்ஸ் வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 27 ரன்களை எடுத்தார். 20-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 121 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் பாலாஜி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்