முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தேர்தல் அமைதியாக நடைபெற்றது

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப். 25 - தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. 74 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் நேற்று தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர். பிற்பகல் நிலவரப்படி 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவினை தொடர்ந்து கண்காணித்து வரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மாலை 6 மணிக்குள் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்துவிட்டால், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னரும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

தேர்தல் அமைதியாக நடைபெற சென்னை முழுவதும் பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்காவது பிரச்சினை ஏற்பட்டால் அங்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். குறிப்பாக கிராம பகுதி மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் கடந்த 1967_ஆம் ஆண்டு  76,59 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதன்பின் 47 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் அதிகபட்ச வாக்குப்பதிவாக  74 சதவீதம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 3 தொகுதிகளிலும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். எந்தவித அசம்பாவிதம் நடக்காது இருக்க, பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்குபதிவு செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பதட்டமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவ படையினரை ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளிலும் வாக்குபதிவு அமைதியாக நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களித்து சென்றனர். வருகிற 16_ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவித அசம்பாவித நடக்காமல் தவிர்க்கப்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் வெங்கட்ராமன் (அ.தி.மு.க.), ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.), ஏ.எம்.காமராஜ் (தே.மு.தி.க.), நாஞ்சில் பிரசாத் (காங்.) ஞானி (ஆம் ஆத்மி), சசிபெருமாள் (காந்தியவாதி) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி, ஆலந்தூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு ஓட்டுப் போடவேண்டும்.

எனவே ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாராளுமன்ற தொகுதிக்கு ஒன்றும், சட்டசபை தொகுதிக்கு ஒன்றுமாக 2 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்கள் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் என 2 ஓட்டுக்கள் போட்டார்கள். இங்கு 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்