முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.90 சதவீத வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப் 25 - மதுரை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நேற்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. 

மதுரை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடியில் ஆண்களும், பெண்களும் ஓட்டுப் போடுவதற்கு ஆர்வத்துடன் வந்து நீண்ட கியூ வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். குறிப்பாக, முதன் முதலாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வந்த இளைஞர்கள் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்ற ஆர்வத்துடன் வரிசையில் நின்று இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு செய்த பின்னர் அவர்கள் சிரித்த முகத்துடன் ஓட்டு சாவடியில் இருந்து வெளியே வந்தனர். 

மதுரை பாராளுமன்ற தொகுதியில் 1476 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை பாராளுமன்ற தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மதுரை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளர் வேலுச்சாமி, தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமார், காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன், இடதுகம்யூனிஸ்டு வேட்பாளர் விக்கிரமன் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப் போடுவதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் 1476 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக ஆண்களும், பெண்களும் நேற்று காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிகளின் முன்பு குவிந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருந்து பொறுமையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் வந்து காலையிலேயே ஓட்டுப் போட்டு விட்டு சென்றனர். 

மதுரை நகரில் வசந்தநகர், செல்லூர், பாக்கியநாதபுரம், மாடக்குளம், செனாய்நகர், ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர் உள்ளிட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. வாக்குப்பதிவையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள், தங்களது இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து வந்து ஓட்டு போட்டனர். நேற்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு காலை 11 மணி வரை 35.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  

மதியம் ஒரு மணியளவில் 49.33 சதவீத வாக்குகளும்,  பிற்பகல் 3 மணியளவில் 58.02 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 65.38 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணியளவில் மதுரை பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளையும் சேர்த்து மொத்தத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்தனர். மதுரை கிழக்கு தொகுதியில் 72.16 சதவீத வாக்குகளும், மேலூரில் 72.78 சதவீத வாக்குகளும், மதுரை மேற்கு தொகுதியில் 64.49 சதவீத வாக்குகளும், மதுரை வடக்கு தொகுதியில் 65.16 சதவீத வாக்குகளும், மதுரை தெற்கு தொகுதியில் 67.54 சதவீத வாக்குகளும், மதுரை மத்திய தொகுதியில் 65.06 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டிருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மத்திய பாதுகாப்பு படையினரும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் அமைதியான முறையிலேயே ஓட்டுப்பதிவு நடந்தது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர் என்று மதுரை மாவட்ட கலெக்டர் எல். சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 

ஒருசில வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுதானது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்குள் வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு 

டோக்கன் வழங்கப்பட்டு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தத்தில் மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்