முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏட்டு கொலை: தேமுதிக கவுன்சிலர் மகன்கள் கைது

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

அரக்கோணம், ஜூலை 22 - அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் அடுத்த புரசை ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற தக்கோலம் போலீஸ் நிலைய ஏட்டு கனகராஜ் நேற்று முன்தினம் காலை டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் விசாரணையில் ஏட்டு மீது டிராக்டரை ஏற்றி கொன்று தப்பி சென்றவர் தக்கோலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன்கள் என்பது தெரியவந்தது. தேவராஜின் மனைவி செண்பகவல்லி தக்கோலம் பேரூராட்சி 6வது வார்டு தேமுதிக கவுன்சிலராக உள்ளார். அவரது மகன்களை பிடிக்க போலீசார் சென்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் தான் கொலை செய்தது என்பது உறுதியானது.

தப்பியோடிய மகன்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கவுன்சிலர் செண்பகவல்லி, அவரது கணவர் தேவராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள திருவாலங்காட்டில் அவர்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். திருவாலங்காடு அருகே டிராக்டருடன் பதுங்கி இருந்த அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் போலீசார் தக்கோலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸ் ஏட்டுவை டிராக்டர் ஏற்றி கொலை செய்தது இவர் மட்டும்தானா? வேறு யாரேனும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தார்களா என்று சுரேஷ் மற்றும் அவரது தந்தை, தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், அன்புசெல்வி மற்றும் போலீசாரை டிஐஜி தமிழ்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டிஎஸ்பி கண்ணப்பன் ஆகியோர் பாராட்டினர்.

இதற்கிடையே ஏட்டு கனகராஜின் உடல் நேற்று முன்தினம் மாலை அவரது சொந்த ஊரான மங்கலம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், போலீசார் நேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஏட்டு கனகராஜ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்