முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம்: முதல்வர் பேச்சு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

சென்னை.ஜூலை.22 - சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம் என்று இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதா , அ.தி.மு.க சார்பில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய விழாப் பேருரை:வருமாறு:-

எனது அழைப்பினை ஏற்று ‘இஃப்தார் நோன்பு திறப்பு’ நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது நன்றியினையும், அன்பு கலந்த வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமலான் என்று அழைக்கப்படும் நோன்பு காலம் இஸ்லாமியர்களின் வசந்த காலம் ஆகும். நோன்பிருத்தல் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நோன்பிருத்தல் இறைவனின் அளவற்ற அன்பையும் அருளையும் பெற்றுத் தருகிறது. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் உள்ள ரய்யான் என்ற வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில் உங்களிடையே உரையாற்றுவதிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து அளிப்பதிலும் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம் ஆகும். ஒற்றுமையுடன் இருப்பது; நல்ல காரியங்கள் செய்வது; தர்மம் செய்வது; சலாம் சொல்ல முந்திக் கொள்வது; இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர் என்று பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வது; கோபத்தை அடக்குவது; மன்னிப்பது; சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம் அவர்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் நற்பண்புகளை மட்டும் நமக்கு போதிக்காமல் தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர்.

ஒரு சமயம் ஒரு கூட்டத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு குடிகாரர் எழுந்திருந்து, நபிகள் நாயகத்தைப் பார்த்து, """"எனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டா?"" என்று வினவினான்.

உடனே பக்கத்தில் இருந்த ஒருவர், """"இஸ்லாத்தில், குடிகாரருக்கு இடம் கிடையாது"" என்று சொன்னார்.

இதைக் கேட்ட நபிகள் நாயகம், அந்த நபரை உட்காரச் சொல்லிவிட்டு, குடிகாரரைப் பார்த்து, """"உனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு"" என்று கூறினார்.

உடனே குடிகாரர், """"நான் இஸ்லாத்தில் சேரலாமா?"" என்று கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த நபிகள் நாயகம் அவர்கள், """"கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இறைவனை தொழுகிற போது மட்டும் குடிக்கக் கூடாது"" என்று கூறினார்.

அந்த குடிகாரரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இஸ்லாத்தில் சேர்ந்தார். தொழுகைக்கு போகிற போது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

சிறிது நாட்கள் கழித்து அந்த நபரை பார்த்த நபிகள் நாயகம் அவர்கள், """"காலையில் மட்டும் தொழுதால் போதாது. மாலையிலும் தொழ வேண்டும்"" என்று கூறினார். இரண்டு வேளையும் தொழுகைக்கு போக ஆரம்பித்த அந்த நபர் இரண்டு நேரமும் குடிக்காமல் இருந்தார்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து, """"மேலும், பகலிலும் ஒரு முறை தொழ வேண்டும்; அந்தியிலும் ஒரு முறை தொழ வேண்டும்"" என்று அந்த நபரிடம் கூறினார் நபிகள் நாயகம்.

பின்னர் அந்த நபர் ஐந்து வேளையும் தொழ ஆரம்பித்துவிட்டார். அதனால், அவரால் நாள் முழுவதும், காலை முதல், மாலை வரை, குடிக்க முடியாமல் போய்விட்டது.

ஒரு நாள் தொழுகைக்கு போய்க் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து, """"இறைவனைத் தொழப் போகிற போது மட்டும் குடிக்காமல் இருந்தால் பயனில்லை. இறைவனை தொழுதுவிட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும்"" என்று கூறினார் நபிகள் நாயகம்.

கடைசியில் அந்த நபருக்கு குடிப்பதற்கே நேரம் இல்லாமல் போய்விட்டது. இறைவனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நல்ல பழக்க வழக்கங்கள், வர வேண்டும் என்பதற்காகத்தான். அனைத்து மதங்களும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன.

நபிகள் நாயகம் அவர்கள் நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்திய நாடு அமைதிப் பூங்காவாக விளங்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை, மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும்; தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான அ. தமிழ்மகன் உசேன் வரவேற்புரை ஆற்றியனார் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சன்னி பிரிவு தலைமை ஹாஜி ஜனாப் முப்தி. ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி ஜனாப் ஹாஜி குலாம் முகமது மெஹடி கான், அண்ணா சாலை தர்கா அறங்காவலர் ஹாஜி சையத் மொய்னுதீன், ஜனாப் ஹாஜி ஆற்காடு இளவரசர் முகம்மது அலி, ஜனாபா ஹாஜிமா ஆற்காடு இளவரசி பேகம் சாஹிபா சயீதா அப்துல் அலி, கழக அவைத் தலைவர் ஈ. மதுசூதனன், கழகப் பொருளாளரும், நிதித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, உட்பட அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர். சரத்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன், அகிய இந்திய தேசிய லீக் தலைவர் எஸ்.ஜே.இனாய்த்துல்லாஹ், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அரங்கத்தில் வீற்றிருக்கின்ற தோழமைக் கட்சித் தலைவர்கள், கழக உடன்பிறப்புகள் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், கலந்து கொண்டனர்.

முடிவில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளருமான அ. அன்வர்ராஜா நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago