முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.இ. கவுன்சிலிங்: 80 ஆயிரம் இடங்கள் தேர்வு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 29 – தமிழகத்தில் 534 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 646 மொத்த இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 4079 இடங்கள் கிடைக்கின்றன. இந்த இடங்களை நிரப்பு வதற்கான பொது கலந்தாய்வு கடந்த 7–ந் தேதி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

இந்த கலந்தாய்வு ஆகஸ்டு 4–ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் கலந்தாய்வு நடைபெறாது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட ஒரு லட்சத்து 12,732 பேரில் 77,411 பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 35,010 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர்.

311 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டபோதும் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.

இந்த வருடம் மெக்கானிக் பாடப்பிரிவை அதிகளவு மாணவர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். இ.சி.சி. பாடப் பிரிவு 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் பொறியியல் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், ஒருசில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. மற்ற கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் மிகக் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:–

ஒரு நாளைக்கு 6000 பேர் அழைக்கப்பட்டால் 4000, 4500 பேர் தான் கலந்தாய்விற்கு வருகிறார்கள். கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள் சதவீதம் 40 சதவீதமாக உள்ளது. நேற்று வரை பொதுப்பிரிவில் 76 ஆயிரம் பேரும், தொழில் பிரிவில் 4000 பேரும் மொத்தம் 80 ஆயிரம் பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் 'ஆப்சண்டிசம்' ஒரு சதவீதம் குறைந்து இருக்கிறது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் காலி இடங்கள் எவ்வளவு உருவாகும் என்பதை இப்போது கணிக்க இயலாது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 15 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்து உள்ளனர். இது காலி இடங்கள் அதிகமாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மற்ற பெரிய அளவில் மாற்றம் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு 80 ஆயிரம் காலி இடங்கள் ஏற்பட்டன. இந்த வருடம் அது ஒரு லட்சத்தை கடந்து 1.20 வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பிற்கு மாணவர்களிடம் மவுசு குறைந்ததே இதற்கு காரணம். வேலையின்மை, குறைந்த சம்பளத்தில் வேலை போன்றவற்றால் லட்சக்கணக்கான பி.இ. பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பி.இ. மாணவர் சேர்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்