முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் பண்டிகை: கருணாநிதி – தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.29 – ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி:–

இஸ்லாமிய மக்களின் புனித நூலான ‘‘திருக்குர்ஆன்’’ நூல் அருளப்பட்ட ரமலான் மாதம் முழுவதும் உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல், பசித் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அன்றாடம் உரிய பணிகளை ஆற்றி, நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மனநிறைவோடு ரமலான் திருநாளைக் கொண்டாடும் எனதருமை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இஸ்லாம் நெறி வளர்த்த அண்ணல் நபிகள் நாயகம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார். ‘‘தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள், அவ்வாறே உறவினர்களிடமும் அண்டை வீடுகளில் உள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்போதும் உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளர்களிடமும் அன்பு செலுத்துங்கள்’’ ‘‘பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், கைதிகளை விடுவியுங்கள், பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள், பிறர் மீது பெறாமை கொள்ளாதீர்கள், பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்.

‘‘உங்கள் வாக்குறுதியைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறாதீர்கள்’’– என்பன போன்ற நற்பண்புகட்கும், நேர்மைக்கும், நெஞ்சுறுதிக்கும் வழிகாட்டும் அறிவுரைகளையே போதனைகளாக வழங்கினார் நபிகள் நாயகம். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு– திருவாரூர் வீதிகளில் ஒரு கையில் ‘குடியரசு’ ஏட்டையும், மறு கையில் ‘தாருல் இஸ்லாம்’ ஏட்டையும் ஏந்திய வண்ணம் இஸ்லாமிய மக்களோடு நான் கலந்து பழகிய அந்தச் சிறு வயது முதல் கொண்டுள்ள பாச உணர்வோடு – எனது ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:–

மத நல்லிணக்கம் அரசுகளின் அடிப்படை கடமை. எம்மதமும் சம்மதம் என்பது தான் அரசியல் சட்டத்தின் கொள்கை என்பதனை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:–

ரமலான் நோன்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு புனிதமான கடமையாகும். மேலும் நோன்பு இருப்பதன் மூலம் உடல் நலனும் பேணப்படுகிறது. இவ்வாறு பல வகையிலும் மனிதர்களை மேம்படுத்தும் வகையில் இந்த ரமலான் நோன்பு அமைந்துள்ளது. சர்வ மதத்தவரும் ஒவ்வொரு மதத்தினருடைய சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில் ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற அனைத்து பண்டிகைகளிலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறோம்.

இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையை போக்கி, ஒற்றுமையை வளர்த்து, மனிதநேயம் மலரவும், நாடு வளம் பெறவும், அனைவரும் முன்னேற வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தோடு எனது இதயமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடைகளுக்கும், நற்குணங்களுக்கும் உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழும் போது பாலஸ்தீனத்தில் நிகழும் கொடுமைகள் வேதனையளிக்கின்றன. பாலஸ்தீனம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதி நிலவ வகை செய்யப்பட வேண்டும். இறைவன் அருளிய திருமறையில் உள்ள அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழிக்கவும் பாடுபட இந்நன்னாளில் உறுதியேற்போம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:–

ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர்.

அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப் படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இஸ்லாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:–

‘‘உழைப்பவர்களின் வியர்வை உலர்வதற்குமுன் அவர்களது கூலியைக் கொடுத்து விடுங்கள்’’ என்னும் நபிகள் நாயகம் ‘ஸல்’–ன் நல்வாக்குப்படி, உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் என்பதை இந்த புனிதத் திருநாளில் உறுதிமொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் இத்திருநாளில் உலகெங்கிலும் அன்பு, மகிழ்ச்சியும், சமாதானமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்:–

இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் மிகவும் மகத்தானது திருக்குர்ஆன். அந்த திருக்குர்ஆன் எந்த மாதத்தில் நமக்கு இறைவன் அளித்தாரோ அதுவே இறைவனை நாம் துதிப்பதற்கான சிறப்பான மாதம். அந்த மாதம்தான் ரமலான் மாதம்.

புனித ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல், இறைவனை மட்டுமே துதிப்பது ரமலான் நோன்பின் உயரிய தத்துவமாகும். நோன்பின் மூலம் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருப்பதே இறைவனுக்கு செய்யும் தொண்டிற்கு ஒப்பாக கருதப்படுகிறது.

இந்தியாவில் அனைவரும் ஒன்றே என்ற சகோதரத்துவத்துடன் செயல்பட்டு சிறந்து விளங்குகிறது.

காங்கிரஸ் பேரியக்கம் சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மையினருக்கும் பாலமாக விளங்கி சிறுபான்மையினருக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுத்து நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் காக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

ரமலான் நன்னாளில் அனைவரும் சகோதரத்துவமும், சமாதானமும் தழைத்தோங்க ஒற்றுமையுடன் பாடுபடுவோம். இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் என் ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:–

இந்திய திருநாடு பல்வேறு மதங்களை தனக்குள்ளடக்கிய நாடு. மதசார்பற்ற நம்நாட்டில் பெருபான்மை இந்துக்களும், சிறுபான்மையினரான இஸ்லாமிய பெருமக்களும், வேற்றுமையின்றி உடன்பிறவா சகோதர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago