முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மேலும் 8 விடுதிகள்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 31:2014-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.. .

அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

சமூக ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு அடிப்படையாக விளங்குவது கல்வி என்பதால், அவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறுவதற்கு தேவையான அனைத்து சலுகைகளையும், உகந்த சூழலையும் உருவாக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் தொழில்நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில்நுட்பக் கல்லூரிகள்

24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2) 10-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் தொழிற் பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, சரி விகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதி கலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில், தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577 நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

5) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6) மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும்

1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

7) தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால்

2014-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15000/- ரூபாய் வீதம் 1647 விடுதிகளுக்கு

2 கோடியே 47 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9) ., படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள

906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் B.Ed. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும். மேற்காணும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் கல்வியில் தேர்ச்சி பெற்று,

அதன் மூலம் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago