முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா கொலை பற்றிய சினிமாவுக்கு எதிர்ப்பு - போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable


பாட்டியாலா, ஆக 20 - இந்திரா கொலை பற்றிய பஞ்சாபி சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி காலை சுட்டுக் கொல்லப்பட்டார். தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற போது அவரது மெய்க்காப்பாளர்களே அவரை சுட்டனர். இந்திராவை சுட்ட இருவரும் சீக்கியர்கள். ஒருவர் பெயர் சத்வந்த்சிங், மற்றொருவர் பியாந்த்சிங். இதில் பியாந்த்சிங் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் கொலை சதியில் ஈடுபட்ட சேகர்சிங்கும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சத்வந்த்சிங், சேகர்சிங் இருவரும் திகார் ஜெயலில் தூக்கிலிடப்பட்டனர்.
இந்திரா கொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகளான நிலையில் இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு பஞ்சாபி மொழியில் காவும் தே ஹேரே என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பியாந்த்சிங், சத்வந்த்சிங், சேகர்சிங், இந்திரா ஆகியோர் பற்றிய காட்சிகள் முக்கிய இடம்பெற்றுள்ளது. ரவீந்தர்ராய் என்பவர் இந்த படத்துக்கான கதையை எழுதி இயக்கி இருக்கிறார். விரைவிர் இந்த படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கொலையாளிகளான பியாந்த்சிங், சேகர்சிங், சத்வந்த்சிங் ஆகியோர் தியாகிகளாக புகழப்பட்டுள்ளனர். எனவே படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரமஜித் சிங் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திரா கொலை செய்யப்பட்டது சரி என்பது போல படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தை நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று இளைஞர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டி விடுவது போல் உள்ளது என்றும் இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளனர். ஆனால் பியாந்த்சிங்கின் மகன் சரப்ஜித்சிங் கல்சா கூறும் போது, 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திரா கொலையில் உள்ள நியாயத்தை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை எடுத்தது, அதன் பிறகு இந்திரா பொற்கோவிலுக்கு சென்றது ஆகியவை இந்திராவின் மெய்க்காப்பாளர்களுக்கு ஏற்படுத்திய வேதனையை உணர்த்துவதாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்திரா கொலை படத்தை வெளியிட்டால் பஞ்சாபில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கும் என்றும் உளவு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்