முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் விருது

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார்

உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ நோய் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தென் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், மருத்துவர்கள், யூனிசெப் – நோட்டரி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

தமிழகம் சார்பில் தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைச் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, தாய்-சேய் நலன் காக்கப்படுகிறது. தமிழகத்தின் திட்டங்களை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதல்வர் அம்மா செயல்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். சீமாங்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு சேவை மையத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பிரசவத்தின்பொழுது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால் ஏழை, எளியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாயில் மருத்துவமனைகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுய சார்பு ஏற்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ.12,000 நிதியுதவி 3 தவணை களாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.720 கோடி இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ளவர்களுக்கு பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பின்பு, பேறுகாலத்தில் மற்றும் தடுப்பூசி ஆகிய காலகட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழக மக்களாகிய நாங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த ஆற்றல் மிக்க முதலமைச்சரைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை- 2023 கொள்கையை முதலமைச்சர் அம்மாவின் அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக திட்டங்களை செயல்படுத்திடவும், தமிழகம் இந்தியாவில் சமூகம் மற்றும் சுகாதாரத்தில் முதல் மாநிலமாகத் திகழவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைந்தது மாநில நிதிநிலை அறிக்கையில் மொத்த நிதியில் 5 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 888.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இன்று ரூ.7004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாய்-சேய் நல மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 1980ல் பிரசவத்தின்பொழுது இறப்பு விழுக்காடு 1 லட்சத்திற்கு 450 என்பது இப்பொழுது 68 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு சவிகிதம் 1000க்கு 93 என்ற நிலை தற்பொழுது 1000க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. சீமாங்க் மையங்களின் சிறப்பான சேவையே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. புதன்கிழமைகள் தோறும் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட இடம் என்ற முறை கையாளப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. 2011 டிசம்பர் முதல் ஐந்து நோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு போடப்படுகிறது. யூனிசெப் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 95 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது. 2006ம் ஆண்டு தமிழ்நாடு போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-–96ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோய்க்கெதிராக போராடி வருகிறோம். எந்த குழந்தையும் விடுபடக்கூடாது என்ற இலக்கை தமிழகத்தில் நிர்ணயித்து இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட முழு பங்களிப்பை வழங்கியுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.எப்.பி. நெட்வொர்க் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட ஆலோசித்து வருவது பாராட்டிற்குரியது. ஆறு மருத்துவ அதிகாரிகள் 5 பகுதிகளில் போலியோவை ஒழிக்க பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப உதவியை, வழிகாட்டுதல்களை பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. போலியோ நோயற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இறுதியில் சிறப்பாக செயல்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார்...

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்