முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங்குக்கு சட்டப் பாதுகாப்பு: அமெரிக்க நீதிமன்றம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.22 - மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட செயல்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. ஆனால், நிதியமைச்சராக இருந்தபோது அவர் செய்தவை தொடர்பான வழக்கில் சட்டப்பாதுகாப்பு இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாக்கத் தவறியதாக மன்மோகன் சிங் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தர்ஜித் சிங் என்பவரும், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினரும் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "1991 – 96 கால கட்டத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தினார். இதனால், சட்டத்துக்கு விரோதமாக சீக்கிய இளைஞர்கள் பலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

பின்னர், மன்மோகன் சிங் பிரதமரானபோது, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதை அவர் தடுக்கவில்லை. தவறிழைத்தவர்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டார். எனவே, அவர் மீது மனித உரிமைகளை மீறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, நாட்டின் பிரதமர் என்ற முறையில், நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வதிலிருந்து மன்மோகன் சிங்கிற்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது.

சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஜேம்ஸ் பூஸ்பெர்க் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது அவரின் செயல்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு சட்டப்பாதுகாப்பு உள்ளது. தற்போது மன்மோகன் சிங் பிரதமராக இல்லாவிட்டாலும், அவருக்கு சிறிதளவு சட்டப்பாதுகாப்பு உள்ளது.

ஆனால், அந்த சட்டப் பாதுகாப்பு, அவர் நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட செயல்களுக்குப் பொருந்தாது" என்று பூஸ்பெர்க் தீர்ப்பளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்