முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தினவிழா என்ற பெயரில் எந்த மாற்றமும் இல்லை

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்.3 - தமிழ்நாட்டில் ஆசிரியர் தினவிழா 5–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த விழா ஆசிரியர் தினவிழா என்ற பெயரில் கொண்டாடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்தவர் டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். அவர் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில அளவில் நல்லாசிரியர் விருதும், தேசிய அளவில் விருதும் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த வருடம் வருகிற 5–ந் தேதி ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தும்படி தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த இணையதளத்தில் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று குறிப்பிட்டு உள்ளது.

குரு உத்சவ் என்ற வார்த்தை இந்தி வார்த்தை என்பதால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தினம் குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து பள்ளிகல்வி இயக்குனரக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:–

தமிழ்நாட்டில் பள்ளிகல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா செப்டம்பர் 5–ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்கள் இந்த வருடம் நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள். ஆசிரியர் தினவிழா என்ற பெயரில்தான் விழா நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இதுவரை இல்லை. எங்களுக்கு குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாடும்படி மத்திய அரசில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்