முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 3 – தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் இன்று (3–ந்தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இதில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி அரக்கோணம் விருத்தாச்சலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன் கோவில் நகராட்சி தலைவர் பதவிகள் உள்பட 1000த்துக்கும் மேற்பட்ட ஊரக, நகர்ப்புற வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றன.

அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 29–ந்தேதி அன்று அறிவித்தார்.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக சென்று ஜெயலலிதா ஆட்சி சாதனை துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

சென்ற இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆதரவு தருகிறார்கள்.

வரும் 18–ந்தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 4–ந்தேதி கடைசி நாள் ஆகும்.

எனவே அண்ணா தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

12 மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், 8 நகராட்சி தலைவர்கள், 53 நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள், 7 பேரூராட்சி தலைவர்கள், 101 பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர்கள், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

கோவை மேயர் பதவிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கணபதிராஜ்குமார், திருநெல்வேலி மேயர் பதவிக்கு மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி, தூத்துக்குடி மேயர் பதவிக்கு, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் அந்தோணி கிரேஸி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதே போல் நகரமன்ற தலைவர் பதவிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரக்கோணம் கண்ணதாசன், கடலூர் குமரன், விருத்தாச்சலம் அருளழகன், குன்னூர் சரவணகுமார், புதுக்கோட்டை ராஜசேகரன், கொடைக்கானல் ஸ்ரீதர், ராமநாதபுரம் சந்தானலட்சுமி, சங்கரன்கோவில் ராஜலட்சுமி ஆகிய 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை 35–வது வார்டு டேவிட் ஞானசேகரன், 166–வது வார்டு எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன், ஈரோடு 60–வது வார்டு பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 22–வது வார்டு கலைமகள் கோபால்சாமி, 45–வது வார்டு கண்ணப்பன் திருச்சி 15–வது வார்டு ராஜலட்சுமி, 32–வது வார்டு சங்கர், தஞ்சை 7–வது வார்டு வாசுகி, மதுரை 85–வது வார்டு லதாகுமார், 4–வது வார்டு சண்முகம், திண்டுக்கல் 9–வது வார்டு பாண்டி, தூத்துக்குடி 37–வது வார்டு மாரிமுத்து ஆகியோரும் 3–ந் தேதி தான் மனுதாக்கல் செய்கின்றனர்.

பல்லாவரம் நகரசபை 2–வது வார்டில் ஏ.சி. கணேசன், தாம்பரம் 7–வது வார்டில் நாகூர் கனி, 33–வது வார்டில் கோமளா, மறைமலைநகர் 11–வது வார்டில் கலையரசி, செங்கல்பட்டு 1–வது வார்டில் ஜீவரத்தினம், 6–வது வார்டில் கன்னியப்பன், மதுராந்தகம் 15–வது வார்டில் வடிவேல், ஆவடி 33–வது வார்டில் உமா மகேஸ்வரி உள்பட 53 நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்களும் 3–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய 4–ந் தேதி கடைசி நாள் என்பதால் 3–ந் தேதியும் 4–ந் தேதியும் மனுதாக்கல் பரபரப்பாக காணப்படும்

அனைத்து அண்ணா தி.மு.க. வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும் பணியை துவங்கிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சி சாதனைகளை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து மக்களிடம் வழங்கி ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்