முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்கல் டிக்கெட் முறைகேடாக விற்பனை: 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.3 – ரெயில்களில் அவசரமாக பயணம் செய்ய தட்கல் டிக்கெட் திட்டம் உதவுகிறது. பயணத்திற்கு ஒருநாள் முன்னதாக எடுக்கப்படும் இந்த திட்டத்திலும் பலர் ‘தில்லுமுல்லு’ வேலையில் ஈடுபடுகிறார்கள்.புரோக்கர்கள், ஒருசில டிராவல் மற்றும் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தட்கல் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

சென்னையில் ஆயிரம் விளக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள ஒரு டிராவல்ஸ் ஏஜென்சி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.அசாம் மாநிலம் கவுகாத்தி மற்றும் வடமாநிலத்தவர்கள் இங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர்.

சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு செல்ல ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் அவர்களுக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா ஏஜென்சி தட்கல் டிக்கெட் எடுத்து வழங்கி உள்ளது.ஒரு தட்கல் டிக்கெட்டிற்கு ரூ.400 கூடுதலாக பெற்றுக்கொண்டு இந்த முறைகேடான செயலில் அந்த நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன், அவரது உறவினர் முனியாண்டி, ஊழியர் ரவீந்திரன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில நோயாளிகளுக்கு கூடுதல் விலையில் தட்கல் டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததை எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள தபால் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். தபால் நிலையத்திலும் ரெயில் முன்பதிவு செய்யலாம் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் அங்குள்ள உறவினர் ரவீந்திரன் மூலம் தட்கல் டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைப்பார்.தபால் நிலையத்தில் கூட்டம் இருக்காது என்பதை தெரிந்து கொண்டு திருவாடானை தபால் நிலையத்தை தேர்வு செய்து அடிக்கடி தட்கல் டிக்கெட் எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதற்கு தனியார் மருத்துவமனையில் உள்ள சில ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். வெளி மாநிலத்தவர்கள் சிகிச்சை பெறுவதை தெரிந்து கொண்டு அவர்களை அணுகி சொந்த ஊருக்கு செல்ல உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதி ரெயில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.ரெயில் டிக்கெட்டை முறகேடாக எடுத்து விற்றதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை தேடிவரும் நிலையில் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.

இந்த வழக்கு எழும்பூர் ரெயில்வே மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இன்னும் 15 நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. முறைகேடாக ரெயில் டிக்கெட்டை விற்பனை செய்த குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்