முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக் கோரி பிரதமருக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.3 - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இலங்கை வசமுள்ள 63 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சுப்ரமணிய சாமி கூறிய கருத்துக்கும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் வருமாறு,

பாக் ஜலசந்தியில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். முதல் சம்பவத்தில் கடந்த 1ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 2 மீன்பிடி படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் அவர்களது எந்திர படகு மூழ்கிவிட்டது. அப்போது மற்றொரு படகில் இருந்த மீனவர்களால் அந்த மீனவர்கள் மீட்கப்பட்டார்கள். இப்படி அவர்கள் துயரத்தில் இருந்த நேரத்தில் இலங்கை கடற்படை அங்கு வந்து 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இவர்கள் 16ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மொத்தம் 6 மீனவர்கள் சென்ற அந்த படகும் எந்தரக் கோளாறால் மூழ்கிவிட்டது. இவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த 2மாதங்களாகவே இந்த கைது படலம் 15 முறை நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் 62 படகுகளுடன் 319 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பிறகு உங்கள் அரசின் முயற்சியால் 319 மீனவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இருந்தாலும் துரதிர்ஷ்ட வசமாக 62 படகுகளும் இன்னமும் இலங்கை வசம்தான் உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான டாக்டர் சுப்ரமணியன் சாமி கடந்த 1ம் தேதி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு சுப்ரமணியன் சாமி ஆலோசனை கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து மீனவர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அவரது கருத்து இந்திய அரசின் கருத்தாகவோ, உங்கள் கட்சியின் கருத்தாகவோ இருக்க முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தமிழக மீனவர்கள் தற்போது விரக்தியில் இருக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையை கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் நடந்த இந்திய- இலங்கை மீன்வள கூட்டுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறைச் செயலாளர் எடுத்துரைத்தார். எனவே மீனவர் பிரச்சினையை தீர்க்க கட்சத்தீவு மீட்கப்படவேண்டும். அப்போது தான் இந்த நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இலங்கை கடற்படையின் தொடர் நடவடிக்கைகள் எனது அரசுக்கு பெரும் கவலையளிக்கிறது. எனவே இதில் தாங்கள் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இலங்கை அரசுடன் பேசி 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் . இலங்கை வசமுள்ள 63 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்