முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை சந்தித்க எப்பொழுதும் தயார்: கோவையில் முதல்வர் பேச்சு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.16 – பா.ஜ.க வேட்பாளர் வெள்ளையம்மாள் வாபஸ் பிரச்சினையில் கோஷ்டிப் பூசலை மூடி மறைக்கவே எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று கோவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

18.9.2014 அன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமானம் நிலையம் சென்றடைந்த போது அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து வான் வழியாகப் புறப்பட்டு கோயம்புத்தூர் சென்ற போது அங்கு, கோயம்புத்தூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவினாசி ரோடு, கார்னரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தி, ""பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாள் விழா"" சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தம்மை வரவேற்பதற்காக சாலையின் இரு மறுங்கிலும் ஆங்காங்கே திரண்டிருந்த மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம், திருக்கோயில்களின் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்து, அங்கே பல லட்சக்கணக்கில் முக்கடல் சங்கமித்தது போல் திரண்டிருந்த மக்களுக்கு தமது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு பேசியதாவது :-

எனதருமை வாக்காளப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பார்ந்த வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் மூலம், உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரும், கோயம்புத்தூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான அன்புச் சகோதரர் கணபதி ப. ராஜ்குமார் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்; அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே இன்று நான் இங்கே வந்திருக்கிறேன்.

உங்கள் அன்புச் சகோதரியின் அரசின் சாதனைகளை, துணிச்சலை, தன்னலமற்ற செயலை, உரிமைக்காகப் போராடும் குணத்தை எடைபோட்டு, அதன் அடிப்படையில் மக்களவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தந்தீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை டெல்லிக்கு வெற்றிநடை போட வைத்தீர்கள்.

உழைக்கும் மக்களுக்காக தனது சிந்தனையையும், நேரத்தையும் செலவிடாமல்

தன்னலத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சுயநலவாதிகளுக்கு, அரசியலில் இருந்தே நிரந்தர ஓய்வு பெறும் அளவுக்கு விடை கொடுத்து விட்டீர்கள். அவர்களும் உங்கள் மன நிலையை புரிந்து கொண்டு முதற்கட்டமாக இந்த இடைத் தேர்தலுக்கு விடை கொடுத்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தங்களுக்குள்ள பலத்தை சோதித்துப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் தேசியக் கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன. சுயேட்சை வேட்பாளர்களுக்கோ அல்லது தேசிய கட்சிகளுக்கோ வாக்களிப்பதனால் உங்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.

பொதுவாக தேசியக் கட்சிகளின் சிந்தனை எல்லாம், டெல்லியை மத்திய அரசை சுற்றித் தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ் நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்கிற போது, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களைப் பற்றியா தேசிய கட்சிகள் கவலைப்பட போகின்றன?

இந்தியா என்பது ஒரு கூட்டுக் குடும்பம் போன்றது. இந்தக் கூட்டுக் குடும்பத்தை

ஒரு கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் இந்தியா என்கிற கூட்டுக் குடும்பத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல கிளைக் குடும்பங்கள் உள்ளன. அந்தக் கிளைக் குடும்பங்களின் நலனில் முழு அக்கறை கொண்டுள்ளவர்கள் அந்தக் கிளைக் குடும்பங்களின் தலைவர்களே தவிர, கூட்டுக் குடும்பத்தின் தலைவர்கள் அல்ல.

இந்திய நாட்டை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தமிழர்களின் உரிமைகளை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. ஏனென்றால், அவர்கள் பல மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

உதாரணத்திற்கு காவேரிப் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு இன்னமும் நியாயம் வழங்கவில்லை. இதற்குக் காரணம் என்ன? கர்நாடகாவிலே பாரதிய ஜனதா கட்சிக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், கர்நாடக மக்கள் தங்களுக்கு எதிராக போய்விடுவார்களோ என்ற பயம் பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருப்பது தான் இதற்குக் காரணம்.

கச்சத்தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனுக்களை தற்போதைய மத்திய அரசு இன்னமும் மாற்றவில்லை. இதனை தமிழக பாரதிய ஜனதா கட்சியினரால் தட்டிக் கேட்க முடிந்ததா? இல்லையே!

இதே போல் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நண்பர்களும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என்றால் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கேரளா கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ மவுனமாக இருப்பார்கள். தேசிய கட்சிகளால் மாநில பிரச்சனைகளிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது என்னும் போது; மாநிலத்தில் உள்ள மாநகராட்சியின் பிரச்சனைக்கு அவர்களால் எப்படி தீர்வு காண முடியும்?

பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத் தான் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்கள். இதை மறைக்க ஆளும் கட்சியின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்மையில் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்தப் பேட்டியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வெள்ளையம்மாளை நாகர்கோவில் நகராட்சி தலைவர் வீட்டில் ரகசியமாக தங்க வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் பெரும் தொகைக்கு பேரம் பேசி அவரை அனைத்திந்திய அண்ணா திமுக வாபஸ் வாங்க செய்துவிட்டதாக கூறியிருந்தார். இது எப்படி சாத்தியமாகும்? மேயர் வேட்பாளர் பாரதிய ஜனதா கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவரிடம் எப்படி பேரம் பேச முடியும்? இவர்களுக்குள் உள்ள கோஷ்டிப் பூசலை மூடி மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தவறான குற்றச்சாட்டு காரணமாகவும் அந்தக் கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் வெள்ளையம்மாள் என் முன்னிலையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்.

எங்களைப் பொறுத்த வரையில் மக்களை சந்திக்க என்றைக்குமே நாங்கள்

தயாராக இருக்கிறோம். நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள். எங்களுடைய சாதனைகளை எடை போட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் கிட்டத்தட்ட

80 சதவிகிதம் பேர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மேயர் பதவிக்கான இந்த இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கோ வாக்களிப்பதால் உங்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. அல்லும் பகலும் அயராது தமிழக மக்களுக்காக தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே இயக்கம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஆழுசு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான்.

காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் உச்ச நீதிமன்றம் மூலம் போராடி வெளியிடச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்தின்

உரிமையை நிலைநாட்டி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டிய அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க முந்தைய மத்திய அரசு முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்திய அரசு, உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

இப்படி, எந்த மக்கள் பிரச்சனையானாலும் அதனை எதிர்கொண்டு அதில் வெற்றி காணக் கூடிய ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான்.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வாக்குறுதிகளின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அளித்து இருக்கிறோம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம்; தாலிக்கு 4 கிராம் தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கும் திருமண உதவித் திட்டம்; சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்; தாய்-சேய் நலன் காக்கும் வகையில் 12,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் என, எண்ணற்ற திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, உயர்ந்து வரும் விலைவாசியில் இருந்து ஏழை மக்களை காப்பாற்ற, என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகங்கள்; குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம்; குறைந்த விலையில் பல்வேறு வகையான உப்புகளை வழங்கும் அம்மா உப்புத் திட்டம்; குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கும் அம்மா மருந்தகங்கள்; குறைந்த விலையில் காய்கறிகளை வழங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை நிலையங்கள்; குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் வழங்குதல் என திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நான் வாக்கு சேகரிக்க இங்கே வந்த போது, பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகள் மூடப்பட்டு, சாலை வசதி செய்து தரப்படும் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தேன்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சேதமடைந்த 483 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் 320 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் 120 கோடியே

32 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 96 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் 60 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன.

இதே போன்று, பில்லூர் இரண்டாவது தனி குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். இந்தத் திட்டப் பணிகளில் இயல்பு நீர் கொணரும் குழாய் பதித்தல், 125 எம்.எல்.டி. திறனுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொணரும் குழாய் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான நீர் சேகரிப்புத் தொட்டி ஆகியப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு என்னால் 2012-ஆம் ஆண்டு உங்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 11 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்.

""""ஒரு நாட்டின் முன்னேற்றம் ஏதோ ஒரு துறையிலே மட்டும் பெறப்படுகிற வெற்றியைப் பொறுத்தது அன்று. எல்லாத் துறைகளிலும் வெற்றி காண வேண்டும். அவைகளில் ஒட்டு மொத்தத்தைக் கொண்டே அந்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்று கணக்குப் பார்க்க வேண்டும்"" என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் வாய்மொழிப் படி ஆட்சி புரிந்து கொண்டு வரும் அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

இன்றைக்கு தமிழகம் வேளாண் துறை, தொழில் துறை, சேவைத் துறை என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. வேளாண் துறையை எடுத்துக் கொண்டால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.63 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், எனது ஆட்சிக் காலத்தில் அதாவது, 2011-2012 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 101.52 லட்சம் டன் என்ற உயர் அளவை எட்டி சாதனை படைத்தது. இந்தச் சாதனையை விஞ்சும் அளவுக்கு, 2013-2014 ஆம் ஆண்டின் உணவு தானிய உற்பத்தி 110.65 லட்சம் மெட்ரிக் டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

தொழில் துறையைப் பொறுத்த வரையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது நாள் வரை 13,585 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கப் பெற்று 12,700-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல ஆயிரம் பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் 11,261 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் 20,683 கோடியே 29 லட்சம் ரூபாய் முதலீட்டினை மேற்கொள்ள 43 நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில் 36,848 என்று இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது எனது ஆட்சியில் 42,288 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 97 தொழிற்சாலைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு 11,600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நாங்கள் செய்து தந்துள்ளோம். இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் குறு சிறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கியுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரத் துறையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவன்றி நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் மூலம் இன்னும் ஒரு சில மாதங்களில் 737 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு, இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 463 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும். இது தவிர, 2014-2015 ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. இவற்றின் மூலம் 230 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்க இருக்கிறது.

இது தவிர 3,330 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு பெறத் தக்க வகையில் நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில்

224 மெகாவாட் மின்சாரம் தற்போது பெறப்பட்டு வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மெகாவாட்டாக உயரும்.

மொத்தத்தில் 2014-2015 ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்திற்கு கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருக்கிறது. இதையும் சேர்த்து கூடுதலாக 5,723 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கச் செய்வதற்கு எனது தலைமையிலான அரசு வழி வகுத்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஏற்படுத்தப்பட்ட மின் வெட்டு சமீப காலம் வரை நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்த போதும், கோயம்புத்தூர் மாநகரம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநகரம் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கு மின்வெட்டு இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன்.

எனது தலைமையிலான அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அறவே நீக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 106 நாட்களில் 97 நாட்கள் மின் தடை ஏதுமின்றி தமிழகம் எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதாவது, 2010-11 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 208 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் எனது ஆட்சியில், நடப்பு ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 267 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் மத்திய புள்ளியியல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2012-2013 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, தமிழகத்தில் வளர்ச்சி குறைந்துவிட்டதாக இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் உள்ள உண்மை நிலையை உங்களுக்கு எடுத்துரைப்பது எனது கடமை.

2012-2013 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.39 விழுக்காடு என மத்திய புள்ளியியல் அமைப்பினால் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும் போதும், அகில இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போதும் குறைவு என்பது தான் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.

2012-2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகப் பெரிய வறட்சியை சந்தித்தது. தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகம் நமக்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுத்ததன் காரணமாகவும், வேளாண் உற்பத்தியில் எதிர் மறையான வளர்ச்சியை தமிழ்நாடு சந்தித்தது.

2012-2013 ஆம் ஆண்டைய வேளாண் உற்பத்தி (-)13.04 விழுக்காடு ஆகும். எனவே தான் சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக நாங்கள் அறிவித்தோம். இந்த வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கினோம்.

வேளாண் துறையில் ஏற்பட்ட எதிர்மறையான வளர்ச்சியின் காரணமாக, தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2012-2013 ஆம் ஆண்டில் 3.39 விழுக்காடாக குறைந்தது. ஆனால் 2013-2014 ஆம் ஆண்டில் இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. உணவு தானிய உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவான 110 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை நாம் எய்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.29 விழுக்காடு என இதே மத்திய புள்ளியியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில், அகில இந்திய சராசரி

4.74 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பாண்டில் இதைவிட உயரிய இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களுக்கென சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைகள் துறையால் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 109 கிலோ மீட்டர் நீள சாலைப் பணிகளை நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம். 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. 20 கோடி ரூபாய் மதிப்பில்

கணபதி-டெக்ஸ்டூல் அருகில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, நடப்பாண்டில் 18 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில் 23.67 கிலோ மீட்டர் நீள சாலை மேம்பாட்டுப் பணியும், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலப் பணியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணியும், கோவை மேற்கு வட்டச் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ வசதி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுக்குமாடிக் கட்டடம்; புற்றுநோய் சிகிச்சை மையம்; சீமாங் பிரிவிற்கு கட்டடம்; மற்றும் உபகரணங்கள் வழங்குதல்; அறுவை அரங்கிற்கு கட்டடம்; நூலகத்திற்கு கட்டடம் ஆகியவற்றிற்காக 88 கோடியே

49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 12 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு

புதிய கட்டடங்கள் கட்டவும், 20 நகர்ப்புற சுகாதார மையங்களை மேம்படுத்தவும் 7 கோடியே

4 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சியைச் சார்ந்த 13,179 கர்ப்பிணிப் பெண்களுக்கு 13 கோடியே 17 லட்சம் ரூபாய்

நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியைச் சேர்ந்த 84,866 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 218 கோடியே

75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்,

தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு

2 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசின் நலத்திட்ட உதவிகளான விலையில்லா மடிக்கணினி, நான்கு இணை சீருடைகள், புத்தகப் பை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், காலணி, மிதிவண்டி மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை என 122 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து

81 ஆயிரத்து 830 மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உயர் கல்வியைப் பொறுத்த வரையில், பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. பொறியியல் கல்லூரி மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சூரிய மின்சக்தி சாதனங்கள்

10 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளன. இந்தக் கல்லூரியில் உள்ள தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 16 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 309 கோடியே

22 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகளான குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், தெரு விளக்குகள், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 1,490 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

உக்கடம் பகுதியில் 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குப்பை மாற்று நிலையம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 2.40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்காக 2012-ஆம் ஆண்டு என்னால் திறந்து வைக்கப்பட்டது. எல்லை விரிவாக்கத்திற்கு ஏற்ப திடக்கழிவு மேலாண்மை சேவையை விரிவுபடுத்தும் வகையில்

13 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வாகனங்கள் மற்றும் கொள் கலன்கள் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாநகரில் மட்டும் பழைய பேருந்துகளுக்கு பதிலாகவும், 41 புதிய வழித் தடங்களிலும், 73 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 414 புதிய பேருந்துகளை வழங்க இருக்கிறோம். ஒண்டி புதூரில் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புதிய கூடுதல் பணிமனை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்புத்தூர் மாநகரில் உக்கடம்-சுண்டக்கா முத்தூர் மேம்பாலம் கட்டும் பணியும், கோவைப் புதூர் சாலைப் பணியும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாநகர மக்கள் சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீரினை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் பெறும் வகையில், 451 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதி மக்களுக்கு பில்லூர் மற்றும் ஆழியார் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க, 42 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

காந்திபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம், டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் சின்னசாமி சாலை ஆகியவற்றில் மேம்பாலம் மற்றும் பாதசாரிகள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை 162 கோடி ரூபாய் மதிப்பில் எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளலூர் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், 125 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவும், 80 கோடி ரூபாய் செலவில் காந்திபுரம் ஆர்.எஸ். புரம்-டி.பி. சாலை மற்றும் டவுன் ஹால் ஆகிய மூன்று இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகரத்தை குடிசைகள் இல்லாத நகரமாக மாற்றும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 122 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 2,632 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் 10 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் 224 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, வீடில்லாத ஏழைகளுக்கு மாநகராட்சிக்கு சொந்தமான

20 ஏக்கர் நிலத்தில் 443 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 2,912 வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் சிங்காநல்லூர் பகுதியில் 3 கோடியே

7 லட்சம் ரூபாய் செலவில் 21 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. உப்பிலி பாளையம் பகுதியில் 272 வீடுகள் மற்றும் பொன்னைய ராஜபுரம் பகுதியில் 112 வீடுகள் என மொத்தம் 284 வீடுகள் 58 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் மாநகரில் அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தும் வண்ணம் பெரிய கோம்பை மலை மற்றும் கட்டன் மலையில் தனிக் குகை பாதை 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க நான் உத்தரவிட்டு உள்ளேன்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும், மாநகராட்சிக்கு இணையாக அடிப்படை வசதிகளை வழங்கும் வகையில் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர ஆணையிட்டு உள்ளேன்.

கோயம்புத்தூர் மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், சுமார் 1,745 கிலோ மீட்டர் நீளம் மழைநீர் வடிகால் வசதி 1,550 கோடி ரூபாய் செலவில் படிப்படியாக ஏற்படுத்தித் தர நான் ஆணையிட்டு உள்ளேன்.

கோயம்புத்தூர் மாநகர சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டட கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்தரும் பொருட்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் 10 அம்மா உணவகங்கள் மூலம், ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சிப் பகுதியில் 10 பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிப் பகுதியில் 13,135 நபர்களுக்கு பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சியில் உள்ள 4 லட்சத்து 93 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில்

2 லட்சத்து 88 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரம் குடும்பங்களுக்கு விரைவில் இவை வழங்கப்படும். உங்கள் நலனைப் பற்றி மட்டுமே சதா சர்வ காலமும் சிந்தித்து செயல்படுகின்ற அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

உங்கள் அன்புச் சகோதரியின் அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை மனதில் நிலை நிறுத்தி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கோயம்புத்தூர் மாநகராட்சி இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ‘இலையின் தொடர் ஆட்சி கோவை மாநகராட்சியில்’ என்பதை நீங்கள் நிலைநாட்டிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. கணபதி ப. ராஜ்குமார் அவர்கள் போட்டியிடுகிறார். இவர், கோவை மாநகராட்சியின் வார்டு உறுப்பினராகவும், வடக்கு மண்டலக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். உங்களின் அன்றாடத் தேவைகளையும், உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர். இவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார், உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைபாடுகளை அறிந்து, உங்கள் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.

எனவே, உங்கள் பொன்னான வாக்குகளை, இதய தெய்வம் புரட்சித் தலைவர் கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் செலுத்தி அன்புச் சகோதரர்

கணபதி ப. ராஜ்குமார் அவர்களை கோவை மாநகர மேயராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க!, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.''

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தொடர்ந்து, பொதுக்கூட்ட மேடையில் கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின், மாநில காங்கிரஸ் சேவா தள அமைப்புச் செயலாளர் கருணாகரன் தலைமையில் 1,500 பேர்; தேமுதிக-வைச் சேர்ந்த, கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் 700 பேர், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கௌரிநாதன் தலைமையில் 800 பேர், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் 400 பேர்,

எஸ்.எஸ். குளம் பேரூராட்சி மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியம் தலைமையில் 300 பேர்; திமுக-வைச் சேர்ந்த சூலூர் ஊராட்சி ஒன்றியக் குழு 10-ஆவது வார்டு உறுப்பினர் தங்கவேல் தலைமையில் 500 பேர், துடியலூர் பேரூராட்சிச் செயலாளர் தேவராஜ் தலைமையில் 400 பேர்; தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் கூர்மன் தலைமையில் 400 பேர்; கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற 15-ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் 200 பேர் உட்பட கோவை மாநகர் மாவட்ட தேமுதிக மாணவர் அணி துணைச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட 5,200 பேர் தத்தமது கட்சிகளில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அவர்களுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர், கழகப் பொதுச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா , கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி `வீர வாள்' வழங்கி சிறப்பித்தார்.

நிறைவாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா பொதுக்கூட்ட மேடையில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து வான் வழியாகப் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்