Idhayam Matrimony

செப்.25-ந்தை கருப்பு தினமாக கடைபிடிப்போம்: கருணாநிதி

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 - ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ராஜபக்ச கலந்து கொள்ளும் செப்டம்பர் 25-ம் தேதியை, கருப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

"26-8-2014 அன்று நடைபெற்ற "டெசோ" கூட்டத்தில், நான்காவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 'இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக்சவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று "டெசோ" அமைப்பின் அவசரக் கூட்டம் ஐ.நா.வை கேட்டுக் கொள்கிறது' என்பதாகும்.

முக்கியமான இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பிலேயே பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட "பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" ஒன்றும் நடத்தப்பட்டது.

தீர்மானத்தில் நாம் வலியுறுத்தியிருந்தபடி ராஜபக்சவை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசும் இதுவரை வலியுறுத்தவில்லை. ஐ.நா. பொதுமன்றமும் ராஜபக்சவுக்கு அனுப்பிய அழைப்பினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றிய அதிபர் ராஜபக்ச, நமது "டெசோ" கூட்டத் தீர்மானத்தில் நிறைவேற்றிய கருத்துகளின் அடிப்படையில், வரும் செப்டம்பர் 25-ம் தேதியன்று ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதைக் கண்டித்து உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், ஈழத் தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் 25-9-2014 அன்று தத்தம் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி வைப்பதோடு, கருப்புச் சட்டை அணிதல், கருப்புச் சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் ராஜபக்சவுக்கு தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்