முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்டில் ஜாமீன் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

பெங்களூர், செப்.30 - பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை இன்று உயர்நீதிமன்றத்தில் விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.

ஜாமீன் மனுவுடன், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற மேல் முறையீட்டு மனுவையும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மனுவையும் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் சமர்ப்பித்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனு செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அலுவலகத்தில் வைத்து மனுக்களை அதிமுக வக்கீல்கள் அளித்துள்ளனர். தற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அக்டோபர் 6ம் தேதி வரை கோர்ட் விடுமுறையாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே ஜெயலலிதாவின் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நீதிபதி ரத்னகலா இந்த மனுக்களை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்துள்ள முன்னாள் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்ட நிபுணருமான ராம்ஜெத்மலானி ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கோரும் வழக்கில் ஆஜராகவுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பைத் தொடர்ந்து தனிக்கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்து கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதலில் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்