முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட காங்கிரசார் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 21 - மகராஷ்டிரம், அரியானா மாநில சட்டசபை தேர்தல் உட்பட தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் காங்கிரசை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

பிரியங்காவை தீவிர அரசியலில் ஈடுபட அக்கட்சியினர் வலியுறுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே அக்கட்சி பின்னடைவை சந்தித்த பல்வேறு சமயங்களில் அவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கைகளை அவர் புறக்கணித்து வருவதுடன் சில நேரங்களில் ஊகங்கள் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரம், அரியானா மாநிலங்களில் நடைபெற்ற பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. அவற்றில் காங்கிரஸ் கட்சி பல்வேறு தொகுதிகளில் பின்தங்கிய நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு திரண்ட அக்கட்சியின் தொண்டர்கள், பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் சகோதரி பிரியங்காவை தீவிர அரசியலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கொண்டு வர வேண்டும் என்றும், அதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் அலையை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த தொண்டர்கள் குழுவினருக்கு தலைமை வகித்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் சர்மா கூறுகையில், மகராஷ்டிரம், அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டிருந்தால் தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்து இருக்கும். முன்னதாக மக்களவை தேர்தலின் போது ரேபரேலி, அமேதி தொகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். எனவே காங்கிரசில் முக்கிய பொறுப்பை பிரியங்கா ஏற்க வேண்டிய நேரமிது என்றார் ஜகதீஷ் சர்மா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்