முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு டோக்கன் முறை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 22 – தீபாவளி பண்டிகைக்காக கோயம்பேட்டில் இருந்து தினமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.

கடந்த 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை மொத்தம் 3101 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய மாவட்டங்களில் இருந்து 17–ந் தேதியில் இருந்து 20–ந் தேதி வரை 3034 பஸ்கள் விடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 1400 பஸ்களுக்கும் அதிகமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

நாளை தீபாவளி என்பதால் அதிகம் பேர் சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு இன்று கோயம்பேட்டில் இருந்து 1652 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் 1301 சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

இதற்காக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயம் பேட்டில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகிறார். கோயம்பேட்டில் அவருடன் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்கள், பொது மேலாளர்கள், ஊழியர்கள் என 400 பேர் முகாமிட்டு பயணிகளுக்கு உதவி வருகின்றனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மதியம் 2 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை விடிய விடிய கோயம்பேட்டிலேயே முகாமிட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த வண்ணம் இருந்தார்.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு எந்தெந்த பிளாட்பாரத்தில் எந்தெந்த பஸ்கள் புறப்பட உள்ளது என்ற விவரத்தையும், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு எந்தெந்த பிளாட் பாரங்களில் பஸ்கள் உள்ளது என்ற விவரத்தை பட்டியலிட்டு மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒலிபெருக்கியிலும் அறிவிப்பு செய்கின்றனர். 16 சர்க்கியூட் காமிரா மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்க செய்து பயணிகளுக்கு உதவுகின்றனர்.

முன்பதிவு செய்யாத பயணிகள் கடைசி நேரத்தில் அங்கும் இங்கும் பஸ்களை பிடிக்க அலைவது வழக்கம். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த டோக்கனில் எந்த பஸ், எந்த ஊர், பஸ் எண், புறப்படும் நேரம் இருக்கை எண் உள்பட அனைத்து விவரங்களும் குறித்து கொடுக்கப்படுகிறது.

எனவே குறிப்பிட்ட பஸ் வந்ததும் துண்டு போட்டு சீட் பிடிக்காமல் சிரமமின்றி மக்கள் ஏறி அமருகின்றனர்.

பஸ் வசதிகள் குறித்து அங்கு வந்த பயணிகள் கூறியதாவது:–

கமலா (அயனாவரம்):– நான் சேலம் செல்வதற்காக வந்துள்ளேன். நேற்று மழையாக இருந்ததால் இன்று வந்தேன். முன்பதிவு செய்யாததால் எப்படி பஸ் பிடித்து போக போகிறோம் என்று பயந்தேன்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இங்கு வசதிகள் உள்ளது. பஸ் டோக்கன் கொடுத்து இருக்கை எண்ணையும் எழுதி அனுப்பி சீட்டில் உட்கார வைக்கிறார்கள். மிகச் சிறப்பாக மக்களுக்கு வசதிகள் செய்து தந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது.

ரமேஷ் (பெசன்ட்நகர்):– நான் சென்னையில் இருந்து கோவை செல்ல வந்தேன். மழையாக இருந்ததால் ஆன்லைனில் ‘புக்’ செய்யவில்லை. கோயம்பேட்டில் பஸ் பிடித்து செல்ல வந்தேன். இங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் எங்களுக்கு வழி காட்டினார்கள். டோக்கன் வழங்கி பஸ் நிற்கும் இடத்தையும் சொல்லி இருக்கையிலும் உட்கார வைக்கின்றனர். எந்த சிரமமும் எங்களுக்கு இல்லை. ஏற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது என்றார்.

முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பஸ்கள் 7, 8, 9 ஆகிய 3 பிளாட்பாரங் களிலும் 1 மற்றும் 2–வது பிளாட்பாரங்களில் 200 கிலோ மீட்டருக்கு குறைவான ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் 3, 4, 5, 6 பிளாட்பாரத்தில் ரிசர்வ் செய்த பயணிகளுக்காகவும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

எப்போது சென்றாலும் பஸ்சில் இருக்கை கிடைப்பதால் கோயம்பேடுக்கு பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்