முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக். 31 - பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடத்தப்பட்டது. பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் 3 நாட்கள் இந்த விழா நடைபெற்றது.

முதல் நாள் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. 2–வது நாளான தேவரின் அரசியல் விழா நடைபெற்றது. நேற்று (வியாழக்கிழமை) குருபூஜை நடைபெற்றது. நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் காலையிலேயே தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஜெயலலிதா அணிவித்த

13 கிலோ தங்க கவசம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், மற்றும் சிலை உள்ளது. இந்த நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் 9–ம் தேதி ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அணிவித்து வணங்கினார். இதையடுத்து தங்ககவசம் மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 107வது பிறந்தநாள் விழாவும், 52வது குருபூஜை விழாவும் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இவ்விழாவையொட்டி மதுரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு முதல் முறையாக இந்தாண்டு 107–வது ஜெயந்தி விழாவும் 52வது குருபூஜையும் நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை 9.50 மணிக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்புற அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தர்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், சாமி முருகன், குணசேகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், அவைத் தலைவர் செ.முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் எஸ்.கவிதா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் முனியாண்டி, ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், ஒன்றிய சேர்மன் சாந்தி சாத்தையா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் சந்தானலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆணிமுத்து உட்பட ஏராளமான அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பசும்பொன்முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர்வாண்டையார், பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன் எம்.எல்.ஏ., திமுக சார்பில் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னதானம்

பசும்பொன் நினைவிடத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் 15–வது ஆண்டாக லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவா, மாநில துணைத் தலைவர்கள் பி.கழுவன், எம்.கே.செந்தில் உள்ளிட்ட ஏராளமானபேர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்