முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். மேலிடம் மீது ஞானதேசிகன் பகிரங்க குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ 1 - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:–

பதவி என்பது ஓடும் மேகம் போன்றது. நான் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் பதவி வகித்து வருகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து சோனியாவும் ராகுலும் இந்த பதவியை வழங்கினார்கள்.

அந்த நம்பிக்கை வீணாகாத வகையில் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் கட்சியை நடத்தினேன். 10–க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி அனைத்து தலைவர்களையும் ஒரே மேடையில் பேச வைத்தேன். சிறு வயதில் இருந்தே தேசிய இயக்கத்தின் மீது பற்று வைத்திருத்தேன்.

காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக்கு வந்தேன். மூப்பனாரால் அரசியல் முகவரி பெற்று மேல்சபை எம்.பி. ஆனேன். மீண்டும் ஒருமுறை ஜி.கே.வாசனால் மேல்சபை எம்.பி. ஆனேன். கட்சிக்காக உழைத்த திருப்தியுடன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.

எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 3 ஆண்டுகளாக கட்சியை வழிநடத்தினேன். ஆனால் மாநில தலைவர் பதவி முக்கிய பதவியாக கருதப்படவில்லை. மாநிலத்தின் உணர்வுகள், பிரச்சினைகளுக்கு கட்சி மேலிடம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கட்சியை நடத்தும் தலைவரின் ஆலோசனை இல்லாமல் ஒரு மாநிலத்தில் கட்சியை வழிநடத்த முடியாது. இப்படி பல சங்கடங்கள் எனக்கு இருந்தன. உள்கட்சி விவகாரம் என்பதால் பல விஷயங்களை பேசமுடியாது.

10 வருடங்களாக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அதற்காக ஓராண்டு போராடி ராகுல் தலையிட்ட பிறகுதான் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அந்த தலைவர்களில் பலர் சத்திய மூர்த்திபவனுக்கே வருவதில்லை.

3 முறை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி இருக்கிறேன். அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி மேலிடத்துக்கு தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ள வில்லை. பதவியில் இருப்பவர்கள் வேலை செய்வதில்லை. பதவி இல்லாதவர்கள் வேலை செய்கிறார்கள். உற்சாகமாக பணிபுரிபவர்களுக்கு பதவி வழங்கும் அதிகாரம் தலைவருக்கு இல்லை.

இதுபற்றி மேலிடத்தில் சொன்னால் அவர்கள் காதில் வாங்குவதில்லை. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது முதல் நாள் வரை எனக்கு தெரியாது. மேலிடத்தில் கேட்டபோது ஒரு கட்சியை குறிப்பிட்டு அவர்களுடன் கூட்டணி என்றனர்.

ஆனால் அந்த கட்சி மறுநாள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறதே கூட்டணி எப்படி சாத்தியமாகும் என்றேன். இங்கு என்ன நிலைமை என்று தெரியாமலேயே எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்கிறார்கள்.

உறுப்பினர் சேர்க்கைக்காக 10 லட்சம் உறுப்பினர் அட்டைகளை அச்சடித்தோம். முன்பு பலர் உறுப்பினராக சேர்க்கப்பட்டும் அட்டை கொடுக்கப்படவில்லை. எனவே இந்த முறை உறுப்பினராக சேர்க்கும் போதே அட்டை வழங்கப்பட வேண்டும் என்றேன்.

சில நாள் கழித்து சின்னாரெட்டி உறுப்பினர் அட்டையை கொடுக்க வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பரிசீலனை முடிந்து வேறு வடிவத்தில் அட்டையை கொடுக்கலாம் என்றனர். ஆனால் தமிழ் நாட்டில் கட்சிக்காக பாடுபட்ட தலைவர்களை முன்னிருத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது, கட்சி வளரவும் செய்யாது. இப்படிப்பட்ட கவலைகள் வருத்தங்கள் எனக்கு உண்டு.

திடீர் என்று என்னை கேட்காமலேயே கட்சிக்கு பொதுச் செயலாளரை நியமித்தனர். அப்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. கட்சியின் இது போன்ற நடைமுறை மாறா விட்டால் எதிர்காலம் சிக்கலாக இருக்கும்.

கடந்த 3 மாதங்களாக ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கும் வருவதில்லை. கட்சி கூட்டங்களுக்கும் வருவதில்லை. தனியாக ஆவர்த்தனம் செய்கிறார். சில கூட்டங்களையும் தனியாக நடத்தியுள்ளார்.

அது என்ன கூட்டம் என்று எனக்குத் தெரியாது. இதைப் பற்றியெல்லாம் கட்சி மேலிடம் அழைத்து எச்சரிக்கை செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நான் தலைவராக இருக்கும் போதே அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்று விவாதித்த அநாகரீகத்தையும் சந்தித்தேன். எனவேதான் டெல்லியில் கூட்டம் முடிந்ததும் அகமது படேலை சந்தித்து ஒரு கடிதத்தை கொடுத்தேன்.

நேற்றுமுன் தீனம் முழுவதும் யோசித்து இரவு 7 மணிக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன். அதை ஏற்றுக் கொள்ளும் வரை தலைவராக நீடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் கட்சி உடையுமா? மீண்டும் த.மா.கா. உருவாகுமா என்று கேட்ட போது, ‘‘எனக்கு தெரியாது. யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

முன்னதாக இந்திராகாந்தி நினைவுநாள் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. சத்திய மூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்துக்கு ஞானதேசிகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர், தங்கபாலு, மாநில பொருளாளர் கோவை தங்கம், மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், எஸ்.பி.நெடுஞ்செழியன், மலையூர் புருஷோத்தமன் மற்றும் ஜி.ஆர்.வெங்கடேஷ் சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி.க்கள் ராணி, கந்தசாமி, விஜய்சேகர், எம்.எஸ்.திரவியம், கவுன்சிலர் தமிழ் செல்வன், நடிகர் ராஜ்குமார், சைதை ரவி வேலுத்தேவர், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சீனிவாசன், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், என்.எஸ்.விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்