முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மீனவர்கள் உயிரை காப்பாற்ற தலைவர்கள் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ 1 - இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்கிக் கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் போதைப் பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு தொடுத்தனர்.

அவர்கள் மீன்பிடி படகில் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தி, நடுக்கடலில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்களிடம் கொடுத்த தாகக் கூறி, அவர்கள் எட்டு பேரையும் கைது செய்ததாகத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் இளைஞர்கள். 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

குறிப்பாக லாங்லெட் என்பவர் 19 வயதே நிரம்பியவர். அவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க வேண்டுமென்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக க்யூ பிரிவு போலீசாரும், உளவுத் துறையினரும் இதுகுறித்து விசாரித்து, இந்த ஐந்து பேர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபசே, இலங்கை சிறையிலே உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும், இந்த ஐந்து பேரை விடுதலை செய்யவில்லை. கடந்த 35 மாதங்களாக விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையிலே வாடி வதங்கிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு 30–10–2014 அன்று கொழும்பு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பினைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள மீனவர்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடங்கி, பல இடங்களில் வாகனங்களை உடைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியிலே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 500 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து எரிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கண்ணீரோடு பேட்டி அளித்திருக்கிறார்கள்

இந்தப் பிரச்சினையை சட்ட ரீதியாகவும், தூதரக உறவுகள் மூலமாகவும் இந்திய அரசு கையாளும்" என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் இலங்கை உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய நவம்பர் 14–ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதால், மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றி உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தண்டிக்கப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு; இலங்கையில் கடும் மழை காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டு, 120 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு, 150க்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதுபற்றியும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மீட்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதோடு, அந்தக் குடும்பங்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் மீது இடிபோல் விழுந்துள்ளது இதை அறிந்த நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். ஜனநாயக நாடு என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி செய்யும் ராஜபக்சேவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக 5 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடியை நம்பித்தான் தமிழக மீனவர்கள் இருக்கிறார்கள். எனவே இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி 5 மீனவர்களையும் விடுவிக்க தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கையும், தூதரக ரீதியான நடவடிக்கையும் எடுத்து இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த அப்பாவி மீனவர்களை கைது செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் அளவுக்கு இலங்கை சென்றிருப்பது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும். இந்தியாவுக்கு இணையான வலிமை கொண்ட வேறு ஏதேனும் நாட்டை சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அந்த நாடுகள் இலங்கை மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், இந்தியக் குடிமகன்கள் 5 பேருக்கு இத்தகைய அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்குக் கூட இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

5 தமிழர்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது அவர்கள் சார்பில் வாதாட இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிஞர்களை நியமிப்பது உள்ளிட்ட அனைத்து வகை சட்ட உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கேரள கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற இத்தாலிக் கடற்படையினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு வலியுறுத்திய போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உடனடியாக இந்தியா அனுப்பி வைக்கும்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1934-ம் ஆண்டில் இருந்து இலங்கையில் எந்த நீதிமன்றமும் தூக்குத்தண்டனை தீர்ப்பு அளித்தது இல்லை. தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்து இருப்பதற்கு, தமிழ் இனத்தின் மீது ராஜபக்சே கொண்டு இருக்கின்ற வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் தான் காரணம்.

தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தூக்குத்தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு ராஜபக்சே கூட்டத்திற்குத் திமிரும் நெஞ்சழுத்தமும் ஏற்பட்டுள்ளதற்கு இந்திய அரசுதான் காரணம். முந்தைய காங்கிரஸ் அரசை போலவே, ஏன் அதை விட ஒரு படி மேலே சென்று பாரதீய ஜனதா அரசு தமிழர்களுக்கு எதிரான வன்மத்தை கடைபிடித்து வருகின்றது.

இந்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஐந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிருத்தவ சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்காத இந்திய அரசு, பவுத்த துறவி அனகரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு புகழாரம் சூட்டுகின்றது. பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு தமிழர்களுக்கு எதிரானது என்று எச்சரிப்பதுடன், பவுத்தத் துறவி தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதற்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயமாக முயலும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்கட் மற்றும் பிரசாந்த் ஆகிய தமிழக மீனவர்கள் 5 பேர், போதை வஸ்துக்களை கடத்தியதாக இலங்கை அரசால் 2011-ல் கைது செய்யப்பட்டு நடந்து கொண்டிருந்த வழக்கில், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்.

நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்¢டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். எனினும் இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு, நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்றே தமிழக மீனவர்கள் உணர்வு பூர்வமாக கொந்தளித்துப் போய் உள்ளனர்.

தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்வதும் அவர்களது படகுகளை பிடித்து வைத்துக் கொள்வதுமான இலங்கை அரசின் செயல்பாடுகள் பலமுறை கண்டிக்கப்பட்டும் இதுவரை ஒரு நிரந்தர தீர்வு எட்ட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கையில், எரிகிற கொள்ளியில் எண்ணைய் ஊற்றுவது போல இலங்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தமிழக மீனவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும், தொலைநகல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு, உடனடியாக இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

 

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற நமது மீனவர்களுக்கு தக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து மேல் முறையீட்டு மனுக்களை தக்க நீதிமன்றங்களில் அளித்து அவர்கள் விடுதலை பெற வழிவகுக்க வேண்டும், அவர்கள் விடுதலை பெறும்வரை அவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்தியமந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது வேதனைக்குரியது, வருத்தத்திற்குரியது. தமிழக மீனவர்களை காக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே மத்திய அரசு ஒரு கணம் கூட தாமதம் செய்யாமல் மீனவர்கள் விடுதலைக்காக வெளியுறவுத்துறையின் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்.

மத்திய மந்திரியாக நான் இருந்தபோது, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக இலங்கை அதிபருடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருக்க வேண்டுமென மீனவ நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து இந்திய பிரதமருக்கு, நான் தொலை நகல் செய்தி அனுப்பியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. மத்திய அரசு இந்த பிரச்சினையில் ராஜீய முறையில் தலையீடு செய்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அந்த நாட்டு மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கும், தூக்கு தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு இலங்கை அரசின் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், மேல் முறையீட்டில் அவர்களுக்கு கருணை காட்டி மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் இலங்கை அரசியிடம் மத்திய அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு காட்டி வரும் மெத்தன போக்கை இந்த விஷயத்திலும் பின்பற்றாமல், மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 5 மீனவர்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையிலிருந்தும், இலங்கை சிறையிலிருந்தும் அவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு உடனடியாக ஈடுபடவேண்டும். மேலும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இன்னல் செய்து வரும் இலங்கை ராணுவத்தினருக்கும், இலங்கை அரசுக்கும் உரிய பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்கக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு உடனடியாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். 5 பேரின் சார்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, 5 தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்ற மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தூக்கு மர நிழலில் இருக்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் நலனுக்காக உரத்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசு தூக்கு மேடையில் நிற்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போட்டு இலங்கையில் உள்ள சிறையில் அடைத்து கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தமிழர்களை பழி வாங்கும் நோக்கத்துடன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையீட்டின் பேரில் தான் தமிழக மீனவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை விதித்துள்ளது.

மத்திய–மாநில அரசு காலம் கடத்தாமல் 5 மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களுக்கு மரணதண்டனை வழங்கியுள்ள இலங்கையின் இச்செயல் மனித இனத்திற்கே எதிரானது.

பிரதமர் நரேந்திர மோடி தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களின் உயிர் காக்க உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்