முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி வழியாக சபரிமலைக்கு சென்று வர ஒருவழிப் பாதை அனுமதி

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் கார்த்திகை முதல் தேதி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் வழியாக பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்களின் வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளத்துக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவதற்கு தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள், கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக கேரள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு திரும்பும் பக்தர்களின் வாகனங்கள் குமுளி வழியாக தேனி மாவட்டத்துக்குள் வர வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் நிறைவடையும் வரை தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் சென்று வர வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறினர். சபரிமலைக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக காவல்துறை மற்றும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாவட்டத்தில் 5 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவதானப்பட்டி - பெரியகுளம் சாலை, வீ ரபாண்டி, சின்னமனூர், கம்பம் - கம்பம் மெட்டு சாலை சந்திப்பு மற்றும் லோயர் கேம்ப் ஆகிய 5 இடங்களில் செயல்பட்டு வரும் இந்த சேவை மையங்களில் சபரிமலைக்கு சென்று வரும் பக்தர்கள் இளைப்பாறி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேநீர், சுக்கு காபி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்க காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பணியில் இருப்பர் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து