முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பாற்றின் குறுக்கே அணை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் பட்டிசேரியில் 2 டிஎம்சி நீரைத் தேக்கிவைக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணையானது 1959ல் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட மூணாறு பகுதியில் பெய்யும் மழை நீரானது, பாம்பாற்றின் வழியாக அமராவதி அணைக்கு வந்து சேர்கிறது. அமராவதி அணையின் மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் 63 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதி ஆற்றில் உள்ள 15 தடுப்பணைகள் மூலமாக 25 வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு போக சாகுபடிக்கு 18 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணைக்கு தற்போது 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் தலைமடையைத் தவிர மற்ற பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தவிர அமராவதி ஆற்றில் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு 25க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் இத்திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள அரசு அமராவதியின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து, பணிகளை துவக்கி உள்ளது. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்தால் பாசனப்பகுதிகள் அழிந்து போவதோடு, குடிநீர் கிடைக்காமல் பல லட்சம் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பது தமிழக மக்களின் அச்சம். எனவே கேரளா அரசு அணை கட்டுவதை தடை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் பாம்பாற்றின் குறுக்கே கேரள அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் உமாபாரதி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
இடுக்கி மாவட்டம் பட்டிசேரிப்பட்டியில் பாம்பாற்றின் கேரள அரசு குறுக்கே தடுப்பணை கட்டவுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் . எனவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கேரள அரசு, தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து