முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை  - திருவண்ணாமலையில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்ட போது பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷம் எழுப்பினர். மகா தீபத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபதிருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர். 5-ம் நாள் இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 6-ம் நாள் வெள்ளித் தேரிலும், 7-ம் நாள் மகா ரதத்திலும் அருணாசலேஸ்வரர் அபித குஜாம்பாளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். மகாரதம் உள்பட 5 தேர்களையும் பக்தர்கள் மாட வீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

பரணி தீபம்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தியுடன் முழங்கிய லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவில் தேர்கள் அசைந்தபடி பவனி வந்தன. தீப விழாவின் உச்சகட்டமாக,மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர். பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்திருவிழா மெகா திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் திருக்கல்யாண மண்டபம் அருகிலும், வடக்கு கட்டை கோபுரம் அருகே உள்ள கலை அரங்கத்திலும் மெகா திரை மூலம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரணி தீபம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணிவரை கிழக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் கிளிகோபுரத்தின் உட்புறம் வந்து பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்
புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.மகா தீபம் ஏற்றப்பட்டது  . 10-வது நாளான நேற்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அர்த்த நாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கொடி மரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.

பக்தர்கள் கோஷம்
மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கினர். மகாதீபத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

25 லட்சம் பக்தர்கள்
வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளித்தது.

சிறப்பு ஏற்பாடுகள்
பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடைப்பெற்றது. மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு, கடைகளில் யாரும் மின் விளக்குகளை போடவில்லை. மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு  அனைவரும் மின்விளக்குகளை போட்டனர்.

நேரடி ஒளிபரப்பு
கோவில் உட்புறம் வடக்கு கட்டை கோபுரம் அருகே உள்ள கலை அரங்கத்திலும், திருவண்ணாமலை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 தற்காலிக பஸ் நிலையங்களிலும் பக்தர்களின் வசதிக்காக மகா தீபம் நேரடியாக ஒளி பரப்பப்பட்டன. மகா தீபத்திருவிழாவை தொடர்ந்து இன்று பவுர்ணமி தொடங்குவதால் அன்று காலை 8.49 மணி முதல் 14-ந் தேதி காலை 6.36 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைவாசகங்கள் அடங்கிய வண்ணப்பலகைகள் கிரிவலைப்பாதையில் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் உள்பட அடிப்படை வசதி, மின்விளக்கு, சுகாதார பணி வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், திருக்குளங்கள் பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் அந்தந்த துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என போதிய மருத்துவ வசதி ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago