முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையம் அருகே ரூ.1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது : 5 பேர் துப்பாக்கி முனையில் கைது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சென்னை

சென்னை விமான நிலையம் அருகே ரூ.1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை கடத்திய 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி தடை விதித்தது. இதன் பின்னர் நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.500, 1000 ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பவர்களையும், அதனை திருட்டுத்தனமான குறுக்கு வழியில் மாற்றுவதற்கு முயற்சி செய்பவர்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கி அதிகாரிகள் துணையுடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலுமே முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகளை மொத்தமாக கடத்திச் சென்று அதனை கொடுத்து அதற்கு பதிலாக கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை அதிகமாக வாங்கி மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. சென்னை விமான நிலையம் அருகே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்வதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று காலை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது.இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை விரட்டி சென்று துப்பாக்கி முனையில் மடக்கினர். இதனால் காரில் இருந்தவர்கள் வேறு வழியின்றி சிக்கி கொண்டனர்.அந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எண்ணிப் பார்த்தனர். அப்போது ரூ.1 கோடியே 34 லட்சம் இருந்தது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக காரில் இருந்த ரிஷ்வான், முக்தர், சமிஅகமது உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை தாம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து கொடுப்பதற்காக 5 பேரும் அதனை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக ரூ.2 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தருவதாக அந்த பிரமுகர் கூறி இருந்ததும் தெரிய வந்தது.இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. அதுதொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்