முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம் சார்பில் கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் : கீழக்கரையில் உஸ்வத்துன் ஹசனா சங்கத்தின் சார்பில் மழை வேண்டி அனைத்து முஸ்லீம் ஜமாத்தினர் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மட்டுமல்லாமல் சிறிதளவு கூட பெய்யவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் அவதியடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. அன்றாடம் பயன்படுத்தும் உப்பு தண்ணீர் கூட கிடைக்கவில்லை.

ஏனெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கூடுதலாக ஆழத்திற்கு போர் போட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் நிலத்தடி நீர் ஆதாரம் வற்றி விட்டதால் எவ்வளவு அடிக்கு தோண்டினாலும் தண்ணீர் வரவில்லை. இயற்கை மக்களை வஞ்சித்து வருவதால் இறைவனிடம் வேண்டி இயற்கையின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மழைவேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வகையில் கூட்டு பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின் சார்பில் மழைவேண்டி இறைவனிடம் துஆ செய்யும் கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இவ்வாறு கீழக்கரையில் உள்ள உஸ்வத்துன்ஹசனா முஸ்லீம் சங்கத்தின் சார்பில் மழைவேண்டி ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்க தலைவர் என்ஜினீயர் செய்யது அப்துல்காதர் தலைமை வகித்தார். செயலாளர் அமீர்தீன், பொருளாளர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மன்சூர்அலி இமாம்  மழை வேண்டி சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இதில், சங்க துணை தலைவர்கள் சீனாதானா செய்யது அப்துல்காதர், வேளாண் விஞ்ஞானி அகமது புகாரி, எஸ்.எம்.பி.ஜுனைது உள்பட அனைத்து நிர்வாகிகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், கீழக்கரை வாழ் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், ஆரிப் ஆலிம் சிறப்பு துஆ ஓதினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்