முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் ஜன- 8 ம்தேதி சொர்க்கவாசல் திறப்பு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வரும் 8 ம் தேதி அதிகாலை 4.30 பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கோவிலின் செயல்அலுவலர் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான காவேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: 

108 வைணவ திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் இருக்கிறது. இங்கு பேயாழ்வார் திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோவிலில் உள்ள பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளனர். இந்த கோவிலில் வேங்கடகிருஷ்ணன், ருக்மணி, பலராமன், சாத்யகி, அநிருத்தன், பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை அளிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 8 ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவங்கள் துவங்கப்பட உள்ளது. பகல்பத்து உற்வசம் ஜனவரி 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 8 ம் தேதி  நள்ளிரவு 12 மணி முதல் சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மூலவர் அங்கிச்சேவை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சேவையை தரிசனம் செய்ய 300 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட் உள்ளவர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சேவைக்கு சுமார் 1000 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு  ஒரிரு தினங்களில் கோவிலின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.

எல்இடி திரையில் பரமபதவாசல்

பார்த்தசாரதி அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு,  அதிகாலை 2.45 மணி முதல் 4 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை அளிப்பார். அதிகாலை 4 மணிக்கு உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து உள்புறப்பாடு துவங்கப்படும். காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி தருவார். காலை 4.30 மணி முதல் 5 மணிவரை வேதம் செய்த  மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப் பிரபந்தம் துவக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல். காலை 6 மணி முதல் பக்கதர்கள் சிறப்பு தரிசனக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் பொது தரிசனம் முன்கோபுர வாசல் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலை கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் தரிசித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம், திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம், அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு கோவில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கடந்த ஆண்டு போல் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்தவற்காக வழிகள் குறித்த விபரமும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பரமபதவாசல் நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்காக எல்இடி திரைகள் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன.
 
முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை
 
பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மூலம் 4 மாட வீதிகளிலும் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்கு ஏற்ப ராஜகோபுரத்தின் அருகில் இருந்து தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். முதலில் வருபவர்கள் முதலில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் தரிசனம் செய்வதற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து திருவாய்மொழித் திருநாள்  எனப்படும் இராபத்து நிகழ்ச்சி ஜனவரி 9 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெறும். 9 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை மாலை 6 மணிக்கும், 11 ம் தேதி முதல் 17 ம் தேதி காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும் என கூறினார்.

இந்த பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, காவல்துறை உதவி ஆணையர் சங்கர், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்