முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை ஜன 2- புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 திருச்செந்தூர் முருகன்: புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள், விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயில் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்படி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

பெசன்ட் நகர் தேவாலயம் : சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் புத்தாண்டைமுன்னிட்டு நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

வேளாங்கண்ணி பேராலயம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்: புத்தாண்டையொட்டி தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.

நெல்லை பாளையங்கோட்டை தூய அந்தோணியார் பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.

சென்னை தாம்பரம் : சென்னை தாம்பரம் கடப்பேரியில் அமைந்துள்ள தேவாலயத்தில், புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் புத்தாடை அணிந்தபடி பங்கேற்றனர். புத்தாண்டில் அனைவரும் அனைத்து நலங்களும் பெற வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தூய ஜேம்ஸ் ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, திண்டிவனம் சாலையில் உள்ள தூய உலக மாதா ஆலயத்தில் ஆயிரக்ணக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி பாடல்களைப் பாடி புத்தாண்டை வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகேயுள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், புனித அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது.

திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம் மற்றும் பாலக்கரை உலகமீட்பர் பசிலிக்கா உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

 மதுரை: மதுரை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், தூய லூர்து அன்னை ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித பனிமயமாதா தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த இந்திராநகர் ஐ.என்.ஏ. மத்திய ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வேலூர் சி.எஸ்.ஐ மத்திய தேவாலயம் மற்றும் விண்ணரசி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை தேவாலயத்தில், புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்