முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள்:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் திருப்பணிகள் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து திருப்பணிகளையும் விரைந்து முடிக்க உத்திரவிட்டார். இந்து சமய அறநியைலத் துறை ஆணையர் டாக்டர்.எம்.வீரசண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, திருக்கோயில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சி.பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் அடுத்த மாதம் 6ந் தேதி (திங்கட்கிழமை) மீன லக்கினம், ரோஹிணி நட்சத்திரத்தில் காலை 9.05 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரூ.6.29 கோடி திருப்பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து திருப்பணிகளையும் விரைந்து முடிக்க உத்திரவிட்டார். மேலும் அமைச்சர் இராஜகோபுரங்கள், கட்ட கோபுரங்கள், விமானங்கள் மற்றும் சன்னதிகள் ஆகியவற்றில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த அவர், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் யாகசாலை நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்து சமய அறநியைலத் துறை ஆணையர் டாக்டர்.எம்.வீரசண்முகமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் திருப்பணிகள் ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில், திருக்கோயில் நிதியின் மூலம் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் இராஜகோபுர திருப்பணி ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், நான்கு இராஜகோபுரம் மற்றும் ஐந்து கட்ட கோபுரங்கள் ரூ.3.36 கோடி மதிப்பீட்டிலும், இதர விமானங்கள் மற்றும் சன்னதிகள் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது., மின்பணிகள் 80 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 6ந் தேதி நடைபெறவுள்ளதால், திருப்பணிகள் அனைத்தும் வருகிற 25ந் தேதிக்குள் நிறைவடைந்துவிடும் என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்