முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அருகே 27 அடி உயரம் கொண்ட மகா மணிகண்டன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ஆதிஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த சதாகுப்பம் கிராமத்தில் ஆதி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பூமிக்கு அடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

ஆதி ஐயப்பன் கோவில் முன்பாக தமிழகத்திலேயே மிக உயராமான மகா மணிகண்டன் சிலை அமைக்க கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு கடந்த ஓராண்டுகளாக சிலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. இதனையடுத்து மகா மணிகண்டணுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 31ந் தேதி யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் தன பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாகதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 11.50 மணியளவில் மகான் ஸ்ரீ அரிபுத்திர சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு மகா மணிகண்டணுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆதி ஐயப்பன் கருவறை கோபுரம் உள்ளிட்ட சன்னதி விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த கார்த்திகை மாதம் 1ம் தேதி ஆதி ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடந்த 48 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள் இருமுடி தாங்கி ஆதி ஐயப்பன் கோவிலின் 18 படிகளில் ஏறி இருமுடி செலுத்தி ஆதி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இருமுடி கட்டாத பக்தர்கள் 18 படிகள் வழியாக செல்லாமல் மாற்று பாதையில் சென்று ஆதி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்