முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 2,000 பேர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

 

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த விளையாட்டு போட்டிகளில் 2000 பேர் கலந்து கொண்டனர்.

 

மத்திய அரசு ஊரக பகுதி பள்ளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு கேலோ இந்தியா என்னும் தலைப்பில் மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 2 நாள் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், டேக்வோண்டா, வாலிபால், பளுதூக்குதல், பேட்மிட்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கபடி ஆகிய போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியை திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளர் முனுசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

 

போட்டிகளில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.350, 2-ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.250, 3ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.150 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் வருகிற 12-ந் தேதி சென்னை, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

போட்டியின் நடுவர்களாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் எம்.ரமேஷ், சி.பாபு, டி.சித்தார்த்தன், பி.நாகேஷ், டி.முருகன், எஸ்.காமராஜ், ஏ.சீனிவாசன், பி.சுரேஷ், எச்.முத்துகுமாரசாமி, ஏ.கணேஷ்பாபு, கே.சரவணன், ச.பாரதி, ஆகியோர் செயல்பட்டனர்.

 

இன்று (திங்கட்கிழமை) கோ-கோ, ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, மல்யுத்தம், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்