முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதர்களை போன்று ''பொய்முகம்'' காட்டும் குணம் பகவானிடம் இல்லை

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

தூத்துக்குடி : மனிதர்களைப் போன்று ''பொய்முகம்'' காட்டும் குணம் பகவானிடம் இல்லை என்று ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருகரியில் நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் ஆதிநாதர் ஆழ்வாராக ஆதிநாயகி, குருகூர் நாயகியுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மார்கழி அத்யனத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தாண்டிற்கான மார்கழி அத்யனத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிறப்பாக பராங்குசன் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் நாள்தோறும் கோவிலில் ஆன்மிக சிறப்புபெற்ற உபன்யாசர் வேளுக்குடி கிருஷ்ணின் திருப்பாவை உபன்யாசம் நடைபெற்று வருகிறது. 16ம் திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது,

பக்தி யோகத்தால் மட்டுமே இறைவனை நாம் அடைய முடியும். கடவுள் மீது பக்தி செலுத்துவது வாழ்வில் இனிமையானதாகும்.மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை எத்தனையோ முகங்கள் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான முகம் என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எத்தனை எத்தனையோ விதமான முகங்களை கொண்டே செயல்படுகிறோம் என்பது இயல்பானது தான்.
பொதுவாக வீட்டில் ஒரு முகத்துடனும், அலுவலகத்தில் ஒரு முகத்துடனும் இருக்கிறோம். வீடு, அலுவலகம் இரண்டினையும் தவிர்த்து வெளிவுலகினை பார்க்கும்போது பொதுஇடத்தில் வேறொரு முகத்துடன் இருப்பதும் உண்டு. இப்படி நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ முகங்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.

வீடு, அலுவலகம், பொதுஇடம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பொய்முகத்தினை கொண்டு வாழ்கிறோம். இப்படிப் பொய்முகங்களை கொண்டு வாழ்கிற மனிதர்கள் இவ்வுலகில் நிறையவே உண்டு. இதேநேரத்தில் சிலர் மனிதர்களைப்போன்று தானே பகவானும் பல்வேறு முகங்களை கொண்டு இருப்பார் என்றுகூட சிலர் கேட்கலாம். இந்தகேள்வி இயல்பானது தான்.

அதற்காக இதனை பொய் என்று சொல்லிவிட முடியாது. நாம் தினமும் வணங்கும் பகவானுக்கும் பலமுகங்கள் இருப்பது உண்மையானது தான். பெருமாளுக்கு திருமுகங்கள் பல உண்டு. ஒருமுகத்தை நமக்கு காட்டி அருளும்போது, மற்ற எல்லாமுகங்களையும் பெருமாள் மறைத்துக்கொள்கிறார்.

பெருமாள் இவ்வுலக பயன்பாட்டுக்காகவும், நம்மைப்போன்ற அடியவர்களுக்கு அருள்வதற்காகவும் பலமுகங்களுடன் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். பகவான் பெருமாள் விருப்பு&வெறுப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு நம்மைப்போன்று இன்ப, துன்பங்கள் எல்லாம் இல்லை. இங்கே குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ''மனிதர்களைப் போன்று பொய்முகம் காட்டுகிற குணம் எம்பெருமான் பகவானிடம் இல்லவே இல்லை''. ஏனென்றால் இவ்வுலகினையே உய்வித்ததோடு மட்டுமல்லாமல் நம்மையெல்லாம் காக்கும் நாயகனே அவர்தான்.

இதுபோன்று தான் 'தேவை' என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபட்டு இருக்கிறது. உங்களுக்கு தேவையானது என்று நீங்கள் நினைப்பது எனக்கு தேவையில்லாததாக இருக்கலாம். இதுபோன்று நான் எனக்கு தேவையில்லை என்று நினைப்பது உங்களுக்கு மிகமிக அவசியமானதாகவும், முக்கியத்தேவையானதாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும், உலகின் அனைத்துமனிதர்களும் தம் அன்றாடவாழ்வில், தேவை என்று ஒவ்வொரு விஷயத்தை நினைக்கின்றனர். அந்த விஷயம் குறித்து குழம்புகின்றனர். அதற்குத்தீர்வு எங்கே கிடைக்கும் என்றும் தேடி அலைகின்றனர். அப்படி ஒரு விஷயத்தைத் தேடினால்,

அதற்கு உண்டான அர்த்தத்தை அறியவேண்டும் என்று விரும்பினால், அவை அனைத்தும் எங்கே கிடைக்கும் தெரியுமா? மகாபாரதத்தில் நிச்சயமாக கிடைக்கும்.
நமக்கான மிகப்பெரிய வித்தும், சத்தும் அதில்தான் நிரம்பி இருக்கிறது. ''மகாபாரதம்'' நம் தேசத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரியசொத்து. இறைவன் தானே விரும்பி நமக்குத் தந்திருக்கிற அருட்கொடை தான் மகாபாரதம். மகாபாரதத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அதனை வேறுஎங்கே தேடினாலும் கிடைக்காது என்பதை நீங்கள் முதலில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட அற்புதமான மகாபாரதத்தைத் தந்தருளியதால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.

ராமாயணம், சீதையின் வைபவத்தை அழகுற நமக்கு தந்தருளியது என்றால், மகாபாரதம் ஸ்ரீகிருஷ்ண வைபவத்தை முழுவதுமாகப் பறைசாற்றுகிறது. ஸ்ரீராமரைப் போல் நாமும் வாழவேண்டும் என்பதே ராமாயணத்தின் சாராம்சம். ஸ்ரீராமரை முன்மாதிரியாக, ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீராம சரிதையின் நோக்கம். அப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணரைப்போல் வாழவேண்டும் என்பதைச் சொல்கிறதா? மகாபாரதம் என்று எவரேனும் குதர்க்கமாக யோசிக்கலாம்.
ஸ்ரீகண்ணன் வெண்ணையைத் திருடினான், மண்ணைத் தின்றான், ஏகத்துக்கும் பொய்கள் சொன்னான், பதினாறாயிரம் ஸ்திரீகளைக் கொண்டிருந்தான். அதற்காக, ஸ்ரீகிருஷ்ணரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் அப்படியிருக்கலாமே என்று நினைப்பது மிகப்பெரும் தவறு. அப்படி நினைத்தால் நமது சிந்தனையில் மிகப்பெரும் பிழை இருப்பதாகத்தான் அர்த்தம்.

ஒட்டுமொத்த வாழ்வியல் தத்துவங்களைச் சொல்கிற உபதேசம் அடங்கிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்கு சொல்வதுபோல அகில உலகமக்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசங்களை மனத்துள் இறக்கி, அதன்படி வாழவேண்டும் என்பதே மகாபாரதத்தின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு மனிதனும் அந்த உபதேசங்களைச் செயல்படுத்தி, செம்மையாக வாழவேண்டும் எனநினைத்தாலே, நம்தேசம் இன்னும் வளமாகிவிடும்.

அப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு தந்துள்ள கீதையை அருளிய ஸ்ரீகண்ண பரமாத்மா தான் உலகுக்கெல்லாம் நாயகனாக இருக்கிறார். அதனால்தான் அவனுக்கு ‘நாயகன்’ என்று திருநாமம் அமைந்தது. பரந்துபட்ட உலகை வழிநடத்துபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவரே நாயகர் எனும்போது நாயகி? பிராட்டி ஸ்ரீருக்மிணிதேவி ஆவார்.

ஒருவீட்டுக்கு நாயகனாகவும் நாயகியாகவும் இருப்பது பெற்றோர். எனவே, அவர்களின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் சொல்கிற விஷயங்களின்படி வாழ்வில் நடப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ரோல்மாடலாக இருக்கிற பெற்றோர் சரியாக நடந்தால்தான், பொய்யும் புரட்டுமின்றி வாழ்ந்தால்தான், குழந்தைகளும் அவற்றைப் பார்த்தும், பின்பற்றியும் அதன்படியே நடக்கும். அதனால்தான் தந்தையை ''குடும்பத்தலைவன்'' என்றும், தாயை ''குடும்பத்தலைவி'' என்றும் சொல்கிறோம். இதேநேரத்தில் நமக்கெல்லாம் தலைவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், நாயகியாக ஸ்ரீருக்மிணி பிராட்டியாரும் உள்ளனர்.

இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டு விட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.

எனவே, மனதை கடவுளான பகவான் பக்கம் திருப்புங்கள். மொத்த மனதையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி. கடவுளிடம் சரணடைதல் என்பது இவ்வாழ்வில் உயர்வான விஷயத்துடன், உத்தமமான காரியமாகும். அப்படி இறைவனிடம் தம்மை ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே வாழ்வில் பாக்கியவான்கள். இதற்கேற்ப நாமும் வாழ்வில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பக்தியால் சரண் அடைந்து வாழ்வில் ஆனந்தம் கண்டு பேரானந்தம் பெற்று என்றும் எப்போதும் மகிழ்வோடு வாழ்ந்திடுவோம் என்றார்.

இந்த உபன்யாச நிகழ்வில், எம்பெருமானார் ஜீயர் சுவாமி, ஆத்தான் மேலத்திருமாளிகை அப்பு சடகோபாச்சாரியார், கீழத்திருமாளிகை ராமானுஜ சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பாவை உபன்யாசம் தினந்தோறும் காலை 7.30மணி முதல் காலை 9.30மணி வரை என தொடர்ந்து வரும் ஜனவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பராங்குசன் சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago