முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் அபாயம் : உலக வங்கி தகவல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில்  இருந்து 7 சதவீதமாக குறையும் அபாயம் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும்,  உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.

உலகவங்கி அறிக்கை
2017-ம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? என்பதை கணித்துள்ள உலக வங்கி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. வர்த்தக தேக்கம், அடக்கமான முதலீடுகள் மற்றும் உச்சபட்ச கொள்கை நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்துக்கு கடினமான ஒரு ஆண்டாகவே இருக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

வளர்ச்சி அதிகரிக்கும்
எனினும் பல ஆண்டு ஏமாற்றத்துக்குப்பின் இந்த ஆண்டு உறுதியான பொருளாதார வாய்ப்புகள் தென்படுவதாக அந்த அறிக்கையில் உலக வங்கி தலைவர் ஜிங் யாங் கிம் கூறியுள்ளார். இதன்மூலம் உலக பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய நேரமிது என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்தியாவில் குறையும்
இதற்கிடையே உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை செயல்படுத்தியதால் கடந்த 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது. இதனால் 2016-17-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் எனவும், எனினும் இது வருகிற ஆண்டுகளில் 7.8 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்