முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதி மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பொங்கல் பண்டியை கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடியேந்தியும், கருப்பு வில்லை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் கடந்த 36 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவதும் வழக்கம். இந்நிலையில் இக்கிராமத்தில் இரண்டு சமூகத்தினரிடையே விளையாட்டு மைதானத்தை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 70 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஒரு பிரிவை சேர்ந்த திருவள்ளுவர் மாணவர் மன்றம் சார்பில் போடி தாலுகா போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் இரண்டு பிரிவினரும் சமாதானமாக சென்று ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினால் அனுமதி தருவதாக தெரிவித்தனர்.

இதனை கண்டித்து ஒரு பிரிவினர் கருப்பு வில்லை (பேட்ஜ்) அணிந்தும், தெருக்களில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடியேந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்பு கொடியேந்தி கிராமத்திற்குள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தை கைவிட்டு வீட்டளவில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து கிராம மக்களில் ஒரு பிரிவினர் கருப்பு வில்லை அணிந்து கருப்பு பொங்கலாக அனுசரிப்பதாக தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்