முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முனியாண்டி சுவாமிகள் திருக்கோவில் பூஜை விழா:

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.   திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்திலிருக்கும் அருள்மிகு முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பூஜை விழாவில் தமிழகம் முழுவதிலும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்ற வழிபாடு நடத்தினர்.இந்த பூஜை விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ அன்னதானம் விருந்தாக வழங்கப்பட்டது.

முனியாண்டி கோவில் பூஜை விழா:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு.முனியாண்டி சுவாமிகள் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று சிறப்பு பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது.இந்த பூஜை விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து முனியாண்டி விலாஸ் உணவங்கங்களின் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதன்படி இந்த ஆண்டு எஸ்.கோபாலபுரம் முனியாண்டி கோவில் பூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இதையொட்டி காப்புகட்டி விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பால்காவடி எடுத்து வந்து முனியாண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வழிபட்டனர்.

சிறப்பு அபிஷேக ஆராதனை:

பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் பழங்கள்,பூக்கள் மற்றும் அர்ச்சனை பொருட்கள் கொண்ட தட்டுக்களை கையிலேந்தி நாட்டாமைகாரர் வீட்டிலிருந்து மேள தாளங்கள் முழங்கிட கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.அப்போது தமிழர்களின் பட்டாசுகள் முழங்கிட பாரம்பரியத்;தை பறைசாற்றிடும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழர்களின் வீரவிளையாட்டுக்களும் நடைபெற்றன.இதையடுத்து முனியாண்டி சுவாமி திருக்கோவிலை வந்தடைந்த மக்கள் ஊர்வலம் சுவாமிக்கு தாங்கள் சுமந்து வந்திருந்த பூக்களால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழிபாடு:

பிரசித்தி பெற்ற அருள்மிகு முனியாண்டி சுவாமிகள் திருக்கோவில் பூஜை விழாவில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.அவருக்கு கோவில் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுத்து பூஜை விழாவில் கலந்து கொண்டதற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.அப்போது முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாதத்துடன் அசைவ அன்னதானம்:


அப்போது பூஜை விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.மேலும் இந்த பூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு வழிபாடு நடத்திய பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோருக்கு  அசைவ அன்னதான விருந்து  வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வானவேடிக்கைகளும் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.கோபாலபுரம் அருள்மிகு.முனியாண்டி சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்