முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 3-ம் தேதி ரதசப்தமி விழா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருமலையில் பிப்ரவரி 3-ம் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. இதனையொட்டி பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

ரதசப்தமி
சூரியன் 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவர் வருடத்தின் 6 மாதம் பூமியின் வடபகுதியை நோக்கியும், 6 மாதம் தென்பகுதியை நோக்கியும் பயணிக்கிறார். அதன்படி தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பயணம் தை மாதம் வளர்பிறைநாளில் வரும் சப்தமி திதியில்தான் வேகம் பெறுகிறது என நம்பப்படுகிறது. அந்தநாள்தான் ரதசப்தமியாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ரதசப்தமி விழா திருப்பதி ஏழுமலையான்கோவிலில் விமர்சையாக நடைபெறும்.

பக்தர்கள் தரிசனம்
அதன்படி இந்த ஆண்டுக்கான ரதசப்தமி விழா வருகிற பிப்ரவரி 3-ந் தேதி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். இதனையொட்டி அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு ஏழுமலையான்கோவிலில் இருந்து உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்கவைர நகைகள், பட்டு வஸ்திரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேற்குமாடவீதிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் வருகிறார். காலை சூரிய ஒளி மலையப்பசாமி மீது பட்டவுடன் வேதபண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

தேவஸ்தான நடவடிக்கை
இது சூரிய ஜெயந்தி விழாவாகவும் அழைக்கப்படுகிறது. அன்று காலையிலிருந்து இரவு 9 மணி வரை சூரியபிரபை, சின்னசேச வாகனம், பெரியசேச வாகனம் உள்பட 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதிகளில் வலம் வருகிறார். அன்று முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்கின்றனர். எனவே பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
கூட்டத்துக்கு பின் முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் கூறுகையில்,

முன்னேற்பாடு தீவிரம்
ரதசப்தமி விழா பிப்ரவரி 3-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு 6 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள், 1½ லட்சம் மோர்பாக்கெட்டுகள் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான லட்டு பிரசாதமும் இருப்பு வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 ஆக உயர்வு
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் ஒரு நபருக்கு 6 டிக்கெட்டுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு வந்தது. இனி இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவதற்கும், தங்கும் விடுதியை பதிவு செய்வதற்கும் எளிதான வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்