முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி திண்டுக்கல்லில்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், - ஜல்லிக்கட்டு மீதான நடவடிக்கையை நீக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் 3வது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 மாணவர்கள் போராட்டம்
 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. திண்டுக்கல்லிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தன்னெழுச்சியாக வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள், வர்த்தகர்கள், லாரி உரிமையாளர்கள், கட்டுமான பொறியாளர்கள் என பல தரப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு உணவு, குடிநீர், பிஸ்கெட் போன்ற பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் கட்சியினர் அளிக்கும் எந்த உதவியையும் மாணவர்கள் ஏற்காமல் புறக்கணித்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
 நாங்கள் தமிழ் உணர்வால் ஒன்று சேர்ந்துள்ளோம், உணவுக்காக அல்ல என்று கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில், பனி, இரவு, பகல் என இவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 மாணவிகளும் ஆர்வம்
 மாணவர்களுக்கு சற்றும் சளைக்காமல் மாணவிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், அரசு கல்லூரி, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையிலும் தாங்களாகவே வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் எம்.வி.எம். அரசு கல்லூரிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட போதும், மாணவிகளை வெளியே அனுப்ப வில்லை. இதனையடுத்து அவர்கள் கல்லூரிக்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு போராட்டம் நடந்த கல்லறை தோட்டம் பகுதிக்கு வந்தனர்.
 நடிகர் விஜய் சேதுபதி
 பழனியில் தனியார் கல்லூரி மாணவிகளை வெளியே அனுப்பியதால் அவர்கள் அந்த கல்லூரி முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்தனர். பழனி ரவுண்டானா பகுதியில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்கள் பழனி தபால் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதேபோல் காந்திகிராம கிராமிய கல்லூரி மாணவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
 இதேபோல் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் தொய்வின்றி நடந்து வருகின்றது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெடர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்