முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை  - பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளி ஆச்சி விமானத்தில் பிடாரி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், வரும் 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது.  இதனையொட்டி, பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ஆச்சி விமானத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி, திருக்கோயிலின் 4 மாடவீதிகள் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து,  காலையில்  கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

தூத்துக்குடி சிவன் கோயில் :

இதனிடையே, தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி சிவன் கோயில் மற்றும் கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டவுடன், கோயில் முழுவதும் 10 ஆயிரத்து 8 தீபங்களை ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர். பத்ர தீபவிழாவை யொட்டி, சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருக்கடையூர் அபிராமி அம்மன் :

நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல், வரலாற்று முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இதனையொட்டி, அம்மன் முன், பட்டரின் சிலை அமைக்கப்பட்டு, ஓதுவார்கள், அபிராமி அந்தாதியிலிருந்து ஒவ்வொரு பாடலாக பாட தீபாராதனை நடைபெற்றது. 79-வது பாடலின் முடிவில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்கு எரியவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 தஞ்சாவூரில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்:

திருமலை திருப்பதி தேஸ்தானம் சார்பில், தஞ்சாவூரில், தை அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு கன்னிகாதானம் செய்யப்பட்டு, மாங்கல்ய வைபவம் நடைபெற்றது. பின்னர், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன.

புதுச்சேரியில் கடல் தீர்த்தவாரி :

தை அமாவாசையை முன்னிட்டு, புதுச்சேரியில் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மணக்குள விநாயகர் கோயில், லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்சவ மூர்த்திகள் அணிவகுத்து நிற்க, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்