முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஓ.பி.எஸ். சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வருகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - ஜல்லிக்கட்டு தடை அகற்றம், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பெற்றுத் தந்தது உட்பட தமிழகத்தை சிறந்த முறையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி புரிந்து வருகிறார் என திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மாநில பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் என்.எஸ்.நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,

கடந்த அக்டோபர் மாதம் முதல் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகத்தில் பதிவுச்சான்றிதழ் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2014 மே மாதம் 7ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து ஜூன் மாதம் 6ம் தேதி மதுரையில் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன். அப்போதைய தமிழக முதல்வர் அம்மா 12 சட்டமன்ற உறுப்பினர்களை அதில் கலந்து கொள்ள செய்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனர். தற்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துள்ளனர். முத்தாய்ப்பாக மாணவர்களும், இளைஞர்களும் சிறந்த வழியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டம் நடைபெறும் போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு தடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லியிலேயே தங்கி அதற்கான ஆவணங்களை தயராதித்து ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியதன் பலனாக ஜல்லிக்கட்டு தடை அகற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஆந்திராவிற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீரைப் பெற்று தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் சிறந்த முறையில் ஆட்சி புரிகிறார் என்றால் அது மிகையல்ல.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகள் வகுக்கப்பட்டு அதை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட உள்ளது. குறிப்பாக மழையின்மை காரணமாகவும், கடும் வறட்சியினால் குடிதண்ணீருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இப்பிரச்சனையை போக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய திட்டங்களை வலியுறுத்துவோம். இந்நேரத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மாவை நினைத்து பார்க்கின்றேன். குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கியவர். அது மட்டுமல்லாது வறட்சியின் போது நட வேண்டிய பயிர்கள் குறித்தும் ஆய்வு நடத்தியவர்.

தற்போது நமது இந்தியாவின் மின்சாரத்தேவை 1 லட்சத்து 28 ஆயிரம் மெகாவாட் ஆகும். இன்னும் சில ஆண்டுகளில் மின் தேவை 2 லட்சம் மெகாவாட்டாக ஏற்படும். ஆகவே முன் ஏற்பாடாகவே மின் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் அம்மா மறைந்தாலும் அ.இ.அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி செயல்படும். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது தேனி மாவட்டத்தின் சார்பில் சரத்குமாருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தெய்வேந்திரன் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்