முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு கணக்கில் தினமும் பணம் எடுக்க உச்சவரம்பு தளர்வு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - நடப்பு கணக்கில் தினமும் பணம் எடுக்க இருந்த உச்சவரம்பை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. ஆனால் வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் உச்சவரம்பு தளர்த்தப்படவில்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி ரூபாய் 500,1000 நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் நாடு முழுவதும் மக்கள் திண்டாடினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து தினமும் மக்கள் ரூ.4 ஆயிரத்து 500 எடுத்துகொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால் வாரத்திற்கு ரூ.24 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பின்னர் ஒருநாளைக்கு ரூ.4000 வரை எடுக்கலாம் என்று அளவு குறைக்கப்பட்டது. பின்னர் ரூ.2 ஆயிரம்,500 நோட்டுகள் புதியதாக வெளியிடப்பட்டு மக்களின் சிரமத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளிவர பல மாதங்களாகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அது அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளிவரவில்லை.

நிராகரிப்பு
இந்தநிலையில் தினமும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் வார உச்சவரம்பு நீக்கப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்கள் செலவுக்காக வாரம் ரூ.2 லட்சம் வரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கோரிக்கையையும் ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.

நடப்பு கணக்கு:-
இந்தநிலையில் வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தினமும் வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் எடுக்கும் பண உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கில் ஒரு வாரத்திற்கு ரூ.24 ஆயிரம்தான் எடுக்க வேண்டும் என்று உச்சவரம்பு அளவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நடப்பு கணக்கு, கேஸ் கிரிடிட் கணக்கு ஓவர் டிராப்ட் கணக்கு ஆகியவைகளில் உள்ள அனைத்து லிமிட்களும் நீக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில் சூழ்நிலை குறித்து வாரத்திற்கு பணம் எடுக்கும் உச்சவரம்பு தளர்த்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  சேமிப்பு வங்கி கணக்குகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பும் விரைவில் நீக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்