முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டம்மை, ரூபல்லா நோய்த் தடுப்பூசி முகாமை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - விருதுநகர் வட்டம் மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை, ரூபல்லா நோய்த் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
 விருதுநகர் மாவட்டத்தில், 9 மாதம் நிறைவுற்ற குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட  ( 10ம் வகுப்பு) உள்ள அனைத்து  சிறுவர் சிறுமியர்களுக்கும் தட்டம்மை-  ரூபெல்லா ஆகியநோய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம்  06.02.2017 முதல் 28.02.2017  வரை நடைபெறுகிறது.              
 இத்தடுப்பூசி முகாமில் 9 மாதம் நிறைவுற்ற குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும், 5 வயதிற்கு மேல் 15 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அவர்கள் பயிலும் பள்ளிகளிலும் இத்தடுப்பூசி போடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 4,25,901 குழந்தைகள் பயன் பெற உள்ளனர். 
 இம்முகாமில், மருத்துவத் துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை (ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்), உள்ளாட்சித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, தனியார் மருத்துவமனைகள், இந்திய மருத்துவர்கள் சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்  ஆகியவை பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படுகின்றன.  மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட குழு மேற்படி தடுப்பூசி போட உள்ளது.


 குறிப்பாக 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பரீட்சை நெருங்குவதால், பிப்ரவரி முதல் வாரத்திலேயே தடுப்பூசி போடப்பட வேண்டும். பெற்றோர்கள், ஒரு குழந்தை கூட  விடுபடாமல் இத்தடுப்பூசியினை ஏற்பதற்கு தகுந்த ஒத்துழைப்பு நல்கி இம்முகாம் விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகித சாதனை அடையச் செய்யுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர், திரு.அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
 மேலும், தட்டம்மை இளம் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நோய் ஒரு வகை வைரஸ்களால் இருமல் மற்றும் தும்மல் மூலமாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவக்கூடியது.;.
 தட்டம்மை நோய், பிற அம்மை நோய்களைப் போல காய்ச்சலுடன் கூடிய சிகப்பு தடிப்புகள், இருமல், சளி மற்றும் கண் சிகப்பாதல் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். நிமோனியா, உறுப்பு செயலிழப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.  இந்த அம்மை நோயால், கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேளாமை, கண்புரை, இதய நோய், பிறவி ஊனங்கள்  போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, சிறுவயதிலேயே இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். மேலும், இத்தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.  ஒரே தடுப்பூசியின் மூலம் 2 உயிர்கொல்லி நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கின்றது.  எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இத்தடுப்பூசியை தவறாது தங்கள் குழந்தைகளுக்கு போட்டுக் கொண்டு தட்டம்மை ரூ ரூபெல்லா  நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர், திரு.அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், விருதுநகர்  பழனிச்சாமி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், சிவகாசி  கலுசிவலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்  புகழேந்தி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்