முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மா, கொய்யா, முருங்கையில் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட உயர் அடவு நடவு தொழில்நுட்பம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

தற்போதைய நிலையில் மா, கொய்யா, முருங்கை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் 1 ஏக்கருக்கு 100 முதல் 200 மரங்கள் நடுகின்றனர். இம்மரங்களால்  1 வருடத்திற்கு 1 ஏக்கருக்கு உழுதல், மருந்தடித்தல் உள்ளிட்ட செலவுகள் போக ரூபாய் 20 ஆயிரம் கிடைக்கும்.  ஒருசில நேரங்களில் செலவு செய்த தொகையே கிடைக்காமல் போய்விடுகிறது. தற்போது பருவமழை பொய்த்து வருவதால் போதிய நீரின்றி விவசாயமே செய்ய முடியாத நிலை உருவாகிறது. மேலும் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு  விவசாயம் செய்யும் ஆர்வம் குறைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்திடும் வகையிலும், இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற தமிழக அரசின் கருத்தை நிறைவேற்றும் பொருட்டும்  தோட்டக்கலைத்துறையின் சார்பில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயர் அடவு நடவு புதிய தொழில்நுட்பம் :  இத்தொழில்நுட்பத்திற்கு  உயர் அடவு நடவு என பெயரிடப்பட்டுள்ளது. இத்தொழிற்நுட்பத்தின்படி மா மரங்களோ, கொய்யா மரங்களோ, முருங்கை மரங்களோ 1 ஏக்கருக்கு 674 மரங்கள் நடலாம். இதனால் இருக்கக்கூடிய நிலம், நீர் மற்றும் கிடைக்கக்கூடிய வெப்பம் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மரங்கள் 6 அடி வரை வளரும். மரங்கள் இடைவெளி இல்லாமல் வளர்வதால், மருந்தடிக்கும் போது மருந்து வீணாகாமல் முழுவதும் பயன்படுத்த முடியும். மேலும் விவசாய பணியாளர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் போது உரிமையாளரே விவசாய பணிகளை எளிதாக செய்ய முடியும்.

உற்பத்திக்கான செலவு : இம்முறையில் மரங்கள் நடும் செலவு, உழுதல் மற்றும் சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 1 ஏக்கருக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகும். இப்பணிகளுக்காக அரசு மானியமும் பெறலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்து அதன்மீது ஷீட் போர்த்துவதால் தண்ணீரானது அவியாவதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் குறைந்தளவு நீர் இருந்தாலே இம்முறையில் போதுமானதாகும்.

மகசூல் காலம் : இத்தொழில்நுட்பத்தின்படி நடப்பட்ட மரங்கள் சுமார் 3 ஆண்டுகளிலேயே மகசூலுக்கு தயாராகி விடும். மேலும் இம்மரங்கள் மூலம் சுமார் 20 ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும்.

 விவசாயிகளுக்கு வருமானம் : இத்தொழில்நுட்பத்தின் மூலம் 1 ஏக்கருக்கு 674 மரங்கள் நடப்பட்டுள்ளதால் பழைய முறையில் கிடைக்கும் மகசூலை விட இம்முறையில் இரண்டு மடங்குக்கும் மேல் மகசூல் கிடைக்கிறது. மேலும் இம்முறையில் காய்கள் ஒரே அளவாக இருக்கும். இதனால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பழைய முறையை காட்டிலும் மும்மடங்கு லாபம் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்