முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் பரவும் முறைகளும்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

உலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930 - ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. பின்னர் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. பன்றிகளிடமிருந்து இந்த காய்ச்சல் பரவியதால் இது, பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடும். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது.

அறிகுறிகள்:

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்.

பன்றிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது?

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை மற்றவர்கள் தொடும்போது, அவர்களின் கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது.

அதன்பின் அவர்கள் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது கிருமி தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்