முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் காளையார்கோவில்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது. மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர். கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

தல வரலாறு: சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற் காளையார்கோவில்.

ஐராவதம் வழிபட்டது: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர். இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.

இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன. தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது.

இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.

இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர். மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

எஸ்.பாலமுருகன் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்