முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி!

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      ஆன்மிகம்
Image Unavailable

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் ஜஅட்டமாசித்தி யுபதேசித்த படலம்ஸநடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.ஆலமரத்தைத் தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சிக் கோயிலைப் போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.

தட்சிணாமூர்த்தி பட்டமங்கலத்தில் எழுந்தருளிய வரலாற்றைப் பார்ப்போம்

திருக்கையிலையில் ஒரு கல்லால மரத்தின் கீழே சிவபெருமான் அன்பும் அருளும் நிறைந்த போக தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அம்பிகை இருந்து கொண்டிருந்தார்.சுற்றிலும் நின்ற சிவகணத் தலைவர்களுக்கும் சனகர், சனத்குமாரர் முதலிய நால்வர்க்கும் நல்லுரைகள் வழங்கிக்கொண்டிருந்தார். அந்தப் புனிதமான சூழ்நிலையில் கார்த்திகைப் பெண்களாகிய யக்ஷமாதர்கள் ஜஅம்பா, துலா, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி ஸஅறுவரும் சிவச்சின்னங்கள் துலங்கிட அங்கு வந்தனர்.முருகனுக்குப் பாலூட்டியவர்கள் அவர்கள்.சிவபெருமானின் அருகில் பணிந்து நின்று, பின்னர் திருவடியை வணங்கினர். "கருணைக்கடலே! எங்கள் பிதாவே! நாங்கள் எளியவர்கள். எங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்து அருளவேண்டும்", என்று வேண்டிக்கொண்டனர்.

சிவபெருமான் தம்முடைய இடப்பக்கத்தில் இருந்த அம்பிகையைச் சுட்டிக்காட்டினார். "உமா தேவியே பராசக்தி. மஹேஸ்வரி. அணிமா முதலிய அஷ்டமாசித்திகளும் பணிப்பெண்களாகத் தன்னைச் சுற்றிலும் இருந்து எப்போதும் குற்றேவல் புரிந்து கொண்டிருக்க வீற்றிருப்பவள். ஆகையால் நீங்கள் அம்பிகையை உங்கள் உள்ளங்களில் இருத்தித் தியானம் செய்யவேண்டும். அப்படியானால் அவள் உங்கள் வினைகளை நீக்கி, உங்களை அஷ்டமாசித்திகளுக்குப் பாத்திரர்களாக ஆக்கி,அவளே அந்த சித்திகளை உங்களுக்குக் கொடுத்தருள்வாள்", என்றார்.

பிறகு அவர் அவர்களுக்கு அந்த சித்திகளை உபதேசித்தார். ஆனால் அந்த அறுவருமே அம்பிகையைத் தியானம் புரியாது விட்டுவிட்டனர். ஆகையால் உபதேசம் அவர்களுக்கு அறவே மறந்துபோயிற்று.இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவர்களைப் பட்ட மங்கை என்னும் தலத்தில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் கற்பாறைகளாகக் கிடக்கும்படி சபித்துவிட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்டனர். ஆயிரம் ஆண்டுகள் அவ்வாறு பாறைகளாகக் கிடந்தபின்னர் தாமே மதுரையிலிருந்து அங்கே வந்து அவர்களின் சாபத்தைப் போக்கி,அவர்களுக்குப் பழைய வடிவத்தையும் தந்து, அத்துடன் அஷ்டமா சித்திகளையும் விளக்கிக் காட்டுவதாகச் சொன்னார். அவ்வண்ணமே அந்த அறுவரும் பட்டமங்கையின் ஆலமரத்தடியில் பாறைகளாகக் கிடந்தனர்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து மதுரை சொக்கநாதப்பெருமான் ஞானாசிரிய வடிவம்ஜதட்சிணாமூர்த்திஸ தரித்து பட்டமங்கையில் அந்த அறுவர் கிடக்கும் இடத்தில் தோன்றினார். அவர்களுடைய வினைகள் கெட்டு, சாபவிமோசனமாகுமாறு திருக்கண் பார்வையால் அருளினார். பாறை வடிவம் நீங்கப்பெற்ற அறுவரும் பக்தியுடன் சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்தனர்.

கார்த்திகைப் பெண்களுக்கு சிவனருள் கிடைக்கப்பெற்ற தலம்தான் பட்டமங்கலம். இங்கே ஈசன் தட்சிணாமூர்த்தி பகவானாக அருள் தரிசனம் தருகிறார். பொதுவாக, எல்லாக் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து, இம்மை மறுமை பயனை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார். இவ்வாறு ஐயன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதை திருவிளையாடல் புராணமும் குறிப்பிடுகிறது. இந்த தட்சிணாமூர்த்தி பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னபட்சி வடிவிலும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம்.

தலவிருட்சமான ஆலமரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பகவான் சந்நதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத் தடைகளால் தவிக்கும் கன்னியர் இந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, வழிபட தடைகள் நீங்கி, விரைவிலேயே திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இம்மரத்தில் தொட்டில் கட்டினால், மழலைச் செல்வம் கிடைக்கப்பெறுவார்கள். குழந்தைகள் நாக்கில் சரஸ்வதி மந்திரத்தை எழுதி, தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வரச்செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

இக்கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. உண்டியலே இல்லாத, அர்ச்சனை, தரிசனம் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம்.

இல்லாத வித்தியாசமான கோயில் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது இத்தலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்